Wednesday, August 13, 2008

சுதந்திரமில்லா சுதந்திர தினம்


வீணர்கள் கூட்டம் ஒன்று...

வெடிகுண்டு காட்டி மிரட்டும் செயல் கண்டு...

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

அற்பப் பணத்துக்காக....

சோடைபோன சோம்பேறிகள் நிலை கண்டு...

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

ஒரு லட்சம் காவலர்கள் கண்காணிப்பில்...

தமிழகத்தில் சுதந்திர கொண்டாட்டமாம்!

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

மதத்தின் பெயராலே மனித உயிர் பலி கேக்கும்

உன்மத்தர் வெறிச்செயலால்...

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

சுதந்திர தினத்துக்கே சுதந்திரமில்லாததை

எண்ணிப் பார்க்கையில்...

வெட்கித் தலை குணிகின்றேன்....

வேதனைப் படுகின்றேன்.

Tuesday, August 12, 2008

படித்ததில் பிடித்தது - நல்லி குப்புசாமி செட்டியார்


நவநாகரிக ஆடைகள் ஏராளமாக வந்தபோதும் பெண்களுக்கு பட்டு ஆடைகளின்மீது உள்ள ஆசை இன்னமும் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாயிரம் ரூபாயில் துவங்கி பல லட்சம் விலையில் பட்டுப் புடவைகள் விற்கப்படுகின்றன். பட்டு விற்பனையில் எத்தனை ஷோரூம்கள் இருந்தாலும் தனக்கென தனி முத்திரை பதித்து தமிழகம், இந்தியா என்று மட்டும் இல்லாமல் அயல்நாடுகளிலும் தமது கிளைகளை அமைத்து, பட்டு உலகில் தனி சாம்ராஜ்ஜியம் படைத்ததுதான் நல்லி சில்க்ஸ். பதினேழு இடங்களில் நல்லி சில்க்ஸ் கிளைகள் உள்ளன. இதன் உரிமையாளரும், நட்புக்கு இனியவரும், கலை இலக்கிய ஈடுபாடு கொண்டவரும், பத்மஸ்ரீ, கலைமாமணி விருது பெற்றவரும், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் ஊக்கம் அளிக்கும்விதமாக உதவிகளை செய்பவரும், இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவரும், பல சபாக்களுக்கு தலைவராகவும், பாரதிய வித்யாபவனின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ள நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் எழுத்துலக பிரவேசம் மற்றும் படிப்பதில் அவருக்கு உள்ள ஈடுபாடு பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள அவரை சந்தித்தோம். விற்பனை நேரத்திலும், மும்முரமாக சென்றுகொண்டிருந்த வியாபரத்துக்கு இடையிலும், நமக்காக நேரத்தை ஒதுக்கி, தமது சிறுவயது முதல் துவங்கி இன்றைய நிலைவரை கூறி முடித்தார்.

ஐயா, உங்கள் பள்ளிப் பருவத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

இன்று பெரிய பெரிய கட்டடங்களும் மக்கள் கூட்டமும், வாகன போக்குவரத்து நெருக்கடிகளும் நிறைந்துள்ள இந்த தியாகராயா நகர் நான் பள்ளி மாணவனாக இருந்தபோது எப்படி இருந்தது என்பது இன்றும் என்னால் மறக்க முடியாது. இது ஒரு அழகான கிராமமாக இருந்தது. இப்போது உள்ளதை போல் எங்கு பார்த்தாலும் பள்ளிகள் கிடையாது. இன்றும் இயங்கிக்கொண்டிருக்கும் ராமகிருஷ்ணா பள்ளி மட்டும்தான் இங்கு இருந்தது. அங்குதான் நான் படித்தேன். பள்ளிப் பாடங்களில் ஆங்கிலத்தை தவிர மற்ற எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களை பெற்றுவிடுவேன். அப்போது ஆங்கிலத்தில் எனக்கு அவ்வளவாக நாட்டம் இல்லை. அதனாலேயே வகுப்பில் இரண்டாவது, மூன்றாவது மாணவனாக ரேங்க் எடுப்பேன். சிறு வயதில் கதைகள், கவிதைகள் படித்ததுண்டா?நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் நல்லி சிறிய கடையாக இருந்தது. எனது தந்தையார் வியாபாரத்தை கவனித்து வந்தார். பள்ளி முடிந்ததும் கடைக்கு வந்து விடுவேன். எங்கள் கடைக்கு அருகில்தான் அப்போது தமிழ் பண்ணை புத்தக கடை இருந்தது. அந்தக் கடை வாசலில் கரும்பலகையில், அங்கு விற்கப்படும் புத்தகங்கள் சிலவற்றின் பெயரும் அதில் உள்ள சிறப்பான அம்சங்களும் எழுதி போடுவார்கள்.சிறுவர்களுக்கான புத்தகங்கள் காலணா அரையணாவுக்கு கிடைக்கும். காமிக்ஸ் புத்தகங்களும் அங்கு கிடைக்கும். கடை முடியும் வரை காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி படித்துக் கொண்டிருப்பேன்.

தங்களுக்கு புத்தகங்கள்மீதான ஆர்வம் எப்படி, எப்போதிருந்து வந்தது?புத்தகங்கள்மீதான ஈடுபாட்டை எனக்குள் ஏற்படுத்தியவர் எனது ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் நாராயணன் அய்யர்தான். ‘‘மொழி திறனுக்காகவும், பொது அறிவுக்காகவும், பாட புத்தகங்களோடு நீதி நூல்களையும், பெரியோர்களின் வாழ்க்கை தத்துவங்களையும் நூலகங்களுக்கு சென்று படிக்கவேண்டும்’’ என்று கூறுவார். அவரின் வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, அன்றே பள்ளியில் உள்ள நூலகத்துக்கு சென்றேன். அப்போது சிறுவனாக இருந்ததால் நாம் என்ன படிப்பது, எது நமக்கு பிடிக்கும் என்ற குழப்பம் இருந்தது. அங்கிருந்த நூலகர் இரண்டு நூல்களை கொடுத்தார். ஒன்று மகாத்மா காந்தியின் சத்தியசோதனை மற்றொன்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் அமுதமொழிகள். நான் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவன் என்பதால் சாதாரணமாகவே பரமஹம்சரின் அமுதமொழிகளில் அதிக நாட்டம் இருந்தது. அதேபோல் மகாத்மா காந்தியின் சத்தியசோதனை புத்தகத்தில் இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.தேசத்துக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தது மகாத்மாவின் சத்தியமும், அகிம்சையும்தான் என்ற கருத்து எனக்கு பிடித்தது.

படிக்கும் ஆர்வத்தினை தொடர்ந்து நீங்கள் அதிகம் விரும்பி படித்த புத்தகங்கள்...?

எனக்கு ஆன்மிக நூல்கள், நீதி நூல்களில் இருந்த நாட்டம் வரலாற்றின் மீதும் ஏற்பட்டது. வியாபாரத்துக்காக வந்த கிழக்கிந்தியர்கள் நாடாள முடிந்தது எப்படி என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நிர்வாகம் குறித்த பல விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்பினேன்.உதாரணமாக, இன்று எவ்வளவோ வசதிகள் செல்போன்களாகவும், கம்ப்யூட்டர் இண்டர்நெட்டாகவும் தகவல் பரிமாற்றம் சுலபமாக உள்ளது. ஆனால், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றியபோது எந்த வசதிகளுமே இல்லாத சூழலில், எப்படி தொடர்புகளை வைத்து, தகவல்களை பரிமாறி, நடவடிக்கைகளை இந்தியாவில் மேற்கொண்டார்கள் என்பதெல்லாம் எனக்கு வியப்பாக இருந்தது.

நூலகங்களுக்கு சென்றது உண்டா?

1950-களுக்கு முன்பெல்லாம் வரலாற்றுப் பதிவுகளை தெரிந்துகொள்ள வேண்டுமானால் மெட்ராஸ் ஆர்க்கிவ்ஸ் கன்னிமாரா, அடையாறு தியசாஃபிகல் லைப்ரரி போன்றவற்றுக்குதான் செல்லவேண்டும். பெரும்பாலும் புத்தகங்களை வாங்க ஹிகின்போதம்ஸுக்குதான் செல்வேன். ஆனால் அங்கும் எனது தேடலுக்கான புத்தகங்கள் சில சமயம் கிடைக்காது. பள்ளி படிப்பு முடிந்ததும் நான் மேற்கொண்டு பி.ஏ. வரலாறு முடித்து பி.எல். படிக்க நினைத்திருந்தேன். நாம் ஒன்று நினைத்தால் நடப்பது ஒன்றாக இருக்கும் என்பார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. 1956-ல் எனது தந்தை காலமானதால் மேற்கொண்டு என்னால் படிப்பை தொடரமுடியவில்லை.வியாபாரத்தை நான் கவனிக்கவேண்டியதாயிற்று. கீழே கடையும் மாடியில் வீடும் இருந்தது. கடையை மூடியதும் இரவு நேரத்தில் அனைவரும் உறங்கிவிடுவார்கள். ஆனால் நான் மட்டும் தூக்கம் வரும்வரை புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

நீங்கள் படித்தவற்றில் மிகவும் பிடித்தவற்றையும், பிடித்த எழுத்தாளர் பற்றியும் கூறுங்களேன்?

மகாத்மா காந்தியின் சத்தியசோதனை நூலின் ஈர்ப்பினால் நான் மேற்கொள்ள இருந்த சத்தியம், நேர்மையை வியாபாரத்தில் தரம், குறித்த நேரத்துக்கு பணி நிறைவேற்றுதல் என்று பின்பற்றினேன். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகமானாலும் வாரப் பத்திரிகைகள் செய்தித்தாள்களை தவறாமல் படித்துவிடுவேன். ஑எஸ். முத்தையா என்பவர் எழுதிய ஑மெட்ராஸ் ரீ டிஸ்கவர்ட்ஒ என்ற நூல் 1989&ல் வெளியிடப்பட்டது. அதில் உள்ள தகவல்கள் எந்தெந்த நூல்களில் இருந்து சேகரிக்கப்பட்டன என்ற ஆதாரங்களையும் மேற்கோள் காட்டி எழுதி இருந்தார். அவரை எனது மானசீக குருவாகவே ஏற்றுக்கொண்டேன்.

ஓய்வில்லாத சூழ்நிலையில், புத்தகங்கள் படிக்க நேரம் கிடைக்கிறதா? அரிய நூல்களின் எனது தேடல் இன்றும் தொடர்கின்றது. தினமணி, தினத்தந்தி, தி இந்து பத்திரிகைகளில் வரும் நூல் விமர்சனங்களை தவறாமல் படிப்பேன். அதில் நல்ல தகவல்களுடன்கூடிய புத்தகங்களை வாங்கி எனது நூலகத்தில் சேர்த்து வருகிறேன். எனது லைப்ரரியில் சுமார் 20,000 புத்தகங்கள் இருக்கின்றன. அதில் குறைந்தது எட்டாயிரம் புத்தகங்களாவது மறுப்பதிப்பு செய்ய வேண்டியவைகளாக இருக்கும்.

நீங்கள் எழுதிய முதல் நூல் எது?

1983ம் ஆண்டு அருனோதயம் பதிப்பகத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முப்பது நூல்கள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. அதில் என்னையும் ஒரு நூல் எழுத சொல்லி கூறினார் அருணன். மூன்று நாட்களே இருந்த நிலையில், 'எனக்கு மேடையில் பேசுவது சிரமமில்லை, ஆனால் எழுத வராதே’ என்றேன். எனது நண்பர் தொலைக்காட்சி நிலைய இயக்குனர் நடராஜன் அவர்களும், அருணனும் ‘நாங்கள் இருக்கிறோம் தைரியமாக எழுதுங்கள்’ என்று என்னை ஊக்கப்படுத்தினர். அதனால் உருவானதுதான் எனது முதல் புத்தகமான ‘வியாபாரத்தை பெருக்குவது எப்படி?’ என்ற நூல். 1984-ல் இந்நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக விருது வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து எழுதிய நூல்களில் ‘உறவுகாக்கும் வணிகம்’ என்ற நூலுக்கு 1997-ல் தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது. வணிகம், நிர்வாகம், வாழ்வியல் சார்ந்த நூல்கள் இருபதுக்கும் மேல் எழுதியுள்ளேன்.

உங்களின் விருப்பமான நூல்கள் பற்றி...

சித்தர்கள் வாழ்க்கை வரலாறு, ஔவையார் ஆத்திச்சூடி, இசை சம்பந்தமான விமர்சனங்கள் போன்றவற்றை விரும்பி படிப்பேன். புத்தக விமர்சனங்களை பார்த்தும், புத்தக கடைகளுக்கு சென்று புத்தகங்களை வாங்கினாலும், ஒவ்வொரு முறை சென்னை புத்தக காட்சியின்போதும் ஒரே இடத்தில் பல புத்தக வெளியீட்டாளர்களின் புத்தகங்களை வாங்குவது சுலபமாகவும், வாசகர்களுக்கு வரப்பிரசாதமாகவும் இருக்கும். நானும் ஒவ்வொரு முறையும் தவறாமல் புத்தக காட்சியில் புத்தகங்களை வாங்கி வருவதுண்டு. அவற்றை படித்து, பல நேரங்களில் மேடை பேச்சுக்கான குறிப்புகளையும் எடுப்பதுண்டு. அதேபோன்று நானும் ஆர். நடராஜனும் லண்டன் சென்றபோது, பிரிட்டீஷ் லைப்ரரியில் இருந்து இந்தியாவை பற்றிய பழைய வரலாற்று குறிப்புகள் கொண்ட நூல்கள், வணிக நூல்கள் என நிறைய புத்தகங்களை வாங்கி வந்தோம்.

எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ‘நல்லி திசை எட்டும்’ விருது குறித்து கூறுங்கள்?

‘நல்லி திசை எட்டும்’ என்ற காலாண்டு இதழ் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து வெளி வந்துகொண்டுள்ளது. முழுக்க முழுக்க மொழிபெயர்ப்பு கட்டுரைகள் கதைகள் கொண்ட புத்தகமாக வெளிவருகிறது. அதன் ஆசிரியராக குறிஞ்சி வேலன் என்பவர் இருந்துவருகிறார். அந்தப் பத்திரிகை வெளிவருவதற்கான உதவிகளை வழங்குகிறோம். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதை வழங்கி எழுத்தாளர்களை கௌரவித்து வருகிறோம்.எழுத்துலகில் உங்களின் அடுத்த பணிகள் என்னவாக இருக்கும்? பழைய, அரிய நூல்களை மறுபதிப்பு செய்து, பின்வரும் நம் சந்ததியருக்கும் பயனளிக்கும் விதமாக பாதுகாக்க வேண்டும். சமீபத்தில் கூட கர்நாடக இசையில் புகழ்வாய்ந்த காஞ்சிபுரம் நைனாப்பிள்ளை பற்றி பி.எம்.சுந்தரம் எழுதிய நூலை மறுபதிப்பு செய்து வெளி இட்டுள்ளோம்.


தன்னை பற்றி, தமது எழுத்துலக பிரவேசம் பற்றி, புத்தகங்களின்மீது தனக்கு உள்ள ஆர்வம் பற்றியெல்லாம் வெளிப்படையாக, உற்சாகமாக தெரிவித்தார் நல்லி குப்புசாமி செட்டியார். பட்டு உலகில் பட்டொளி வீசி பறந்தபோதும், பிரபலமான தொழிலதிபரானபோதும், தன்னடக்கமும், நற்குணங்களும் கொண்ட நல்லி செட்டியார் அவர்களுடனான நேர்காணலை இனிதே முடித்து விடைபெற்றோம்.

Wednesday, July 23, 2008

துணிந்து நில் தோழா

துணிந்து நில் தோழா

உயர்வு உன் கையில்...
இளைஞனே....
தடுக்கும் தடைகற்களை தகர்த்து
மிடுக்கோடு எழுந்திடு
அடுக்கடுக்காய் வெற்றிகள் குவியும்
துணிவோடு முயற்சியை தொடர்ந்திடு
விதியை நோவதை விட்டிடு
மதியை கொஞ்சம் தீட்டிடு
சோம்பலும் சோர்வையும் துரத்திடு
சுகங்களில் நாட்டத்தை மறந்திடு
உழைப்பை உறுதியோடு ஏற்றிடு
வெற்றிக்கொடியை நாட்டிடு
உயர்வு உன் கையில்...
இளைஞனே...
உன்னை உணர்ந்து செயல்படு.

Friday, June 27, 2008

நியாயப்படுத்தப்படும் அநியாயங்கள்

நியாயப்படுத்தப்படும் அநியாயங்கள்

நம் தேசத்துக்கு உலக நாடுகள் மத்தியில் ஒரு தனி அந்தஸ்தும், மரியாதையும் உண்டு. அது எந்த விதத்தில் என்று பார்த்தால் பொருளாதாரம்,விஞ்ஞானம்,ஏற்றுமதி,தொழில் முன்னேற்றம் என்ற பல துறைகளை விடவும் முதன்மையாக நிற்பது கலாச்சாரம். மேலை நாடுகளில் வாழ்க்கை முறை, ஒழுக்க நெறிமுறைகளுக்கு இடமே கிடையாது. யாரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற ரீதியில் அவர்களின் வாழ்க்கை ஓடுகின்றது.சீர்கெட்ட வாழ்க்கை வாழும், குடும்ப அமைப்பு அற்ற மேலை நாட்டினரின் வாழ்க்கை கடிவாளம் இல்லாத குதிரைபோன்றது. ஆனால் நம் நாட்டில் தாய், தந்தை,அண்ணன்,தங்கை,அக்கா,தம்பி என்ற ஒரு பாசப்பிணைப்புடனான வாழ்க்கைமுறை உள்ளது.இதுதான் இன்றளவும் உலக நாடுகளிடமிருந்து நம்மை வேறுபடுத்தி, அவர்களின் பார்வைக்கு உயர்வாக நம்மை காட்டுகிறது. அதற்கு அடிப்படை நமது கலாச்சாரம்தான் என்பதில் ஐயமில்லை.ஆங்கிலேயர்களிடம் நாம் பல ஆண்டுகள் அடிமைபட்டுகிடந்தபோது கூட ஏற்படாத கலாச்சார சீரழிவு சமீபத்தில் தொழில் வர்த்தக முன்னேற்றம் என்ற பெயரில் இறக்குமதியான ஐ.டி. என்று சொல்லக்கூடிய கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பனிகளின் வருகையால் வேக வேகமாக விஷம்போல பரவி வருகிறது. ஆங்காங்கே நிகழும் அதிகப்படியான பாலியல் குற்றங்களும்,ஓரினச்சேர்க்கை பிரச்சனைகளும் அதற்கு சான்றுகளாக உள்ளன.இதில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. சாஃட்வேர் இஞ்ஜினியர்களாகி லட்சம் லட்சமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை படும் பெற்றோர்கள் நிச்சயம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஃபாரின் கம்பனிகளின் தாக்கம், கலாச்சாரத்துக்கு ஆணிவேராக இருக்கும் பெண்கள் மத்தியில்தான் அபரிமிதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. வேலையில் சேரும்போதே முதலில் உடையில் மாற்றங்கள் இருந்தால்தான் வேலையே கிடைக்கும்.நேர்முகத் தேர்வுக்கே அழைக்கப்படுகிறார்கள். ஜீன்ஸ் பேண்டும்,டீசர்ட்டும்,ஸ்லீவ்லெஸ் பணியன்களும், அணிந்தால் மட்டுமே ஐ.டி. கம்பெனிகளில் அங்கிகாரம் என்ற நிலை உள்ளது. இதனால் இரண்டு பிள்ளை பெற்ற பெண்ணாக இருந்தாலும் ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட்டுடன் ஒரு ஹேண்ட் பேகை மாட்டிக்கொண்டு அலைவது அதிகமாகிவிட்டது.கணவனை ஏமாற்றும் மனைவியும், மனைவியை ஏமாற்றும் கணவனும்,பெண்ணுக்கு பெண்ணே பேராசை பேராசைகொண்டு உறவுகொள்ளும் தகவல்கள் தினம் தினம் செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் வந்தபடி உள்ளன. அதற்கு பல சம்பவங்களை சொல்ல முடியும். சமீபத்தில் சென்னை திருவொற்றியூரில் இரண்டு தோழிகள்(கிறிஸ்டி,ருக்மணி&லெஸ்பியன்கள்) தவறான பாலியல் தொடர்பினால் தங்களையே மாய்த்துக் கொண்டுள்ளனர். இதை நியாயப்படுத்தி மள்ளுகட்டும் ஒரு சிலரின் வாதங்கள் பல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. தவறான பாலியல் தொடர்புகளால் முதலில் அழியப்போவது குடும்ப அமைப்பு. ஆண்,பெண்ணுக்கு இடையே உள்ள அன்னியோன்யம் அழியும். ஆணுக்கு பெண் அவசியமில்லை,பெண்ணுக்கு ஆண் அவசியமில்லை என்ற நிலை உருவாகிடும். கடைசியில் மேலை நாடுகளில் சொல்லப்படுவது போல் குற்றங்களின் எண்ணிக்கை பத்து நிமிடத்துக்கு பாலியல் குற்றங்கள் இத்தனை, கொலை இத்தனை,கொள்ளைகள் இத்தனை,கடத்தல்கள் இத்தனை என்ற நிலை உருவாகிவிடும். ஑இயற்கைக்கு முரணாக உடலுறவு கொள்வது தண்டனைக்குரியதுஒ என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 377&ல் சொல்லப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தையே திருத்தி ஓரினச்சேர்க்கைக்கு அங்கிகாரம் அளிக்கவேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதற்காக பரிந்துபேச,போராட பெங்களூருவில் உள்ளது போன்று சென்னையிலும் ஒரு அமைப்பை உருவாக்க உள்ள தகவல் சகித்துக்கொள்ள முடியாதது. இந்த கூட்டத்தில் பிரபல எழுத்தாளர்களும்,வழக்கறிஞர்களும்,பத்திரிகையாளர்களும் உள்ளது வேதனைக்குரியதாகும். ஆயிரம் உதாரணங்களை கூறினாலும் முரண் என்ற ஒரு விஷயம் முரண்தான் அதை முறைபடுத்த முணைவது முட்டாள்தனம். அது மீண்டும் நம்மை காட்டுவாசிகளாக்கி கற்காலத்துக்கு அழைத்து சென்றுவிடும்.

Wednesday, June 25, 2008

தினம் தினம் தாமதம்

தினம் தினம் தாமதம்
சிட்டுக் குருவியாய் விடியலில் எழுந்து...
புள்ளி மானாய் துள்ளி குதித்து...
மந்தியாய் தாவி ரயிலை பிடித்து...
அடிமாடாக பேருந்தில் பயணித்து...
வசவுகளை காதிலே வாங்கிக்கொண்டு...
வந்து சேர்ந்தேன் அலுவலகத்தில்.
சொகுசுக் காரில் வந்திறங்கி... கேட்டார் மேலாளர்!
ஏன் தாமதமாய் வருகின்றாய்...?
விக்கித்து நின்றேன் விடை சொல்ல முடியாமல்...
விதியை நொந்துகொண்டு.

Thursday, June 12, 2008

Bus rate

போக்குவரத்து அமைச்சரின் பேத்தல்
சென்னையில் கடந்த மே 28-ந் தேதி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 20 ஆண்டுகளாக விபத்தில்லாமல் பஸ் ஓட்டிய ஓட்டுநர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துறை செயலாளர் தலைமை தாங்கினார். விபத்தில்லாமல் பேருந்து ஓட்டிய ஓட்டுநர்கள் 1100 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கி பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு ‘‘அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் தினமும் சராசரியாக ரூ.91 லட்சம் வருவாய் மட்டுமே கிடைக்கிறது. அதிகபட்சமாக ஒரு கோடியே இருபது லட்சம் வசூலாகியிருக்கிறது. ஆனால், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தினமும் ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் வசூலாகிறது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஒத்துழைப்பே இந்த வருவாய்க்கு காரணம்’’ என்று பேசியுள்ளார். இது எவ்வளவு பெரிய பேத்தல் என்பதை நிச்சயம் சென்னைவாசிகள் உணர்வார்கள். காலையில் அவசர அவசரமாக கிளம்பி நேரத்திற்கு அலுவலகம் சென்று சேரவேண்டும் என்ற வேகத்தில் ஓடும் நடுத்தர வர்கத்தின் தலையை தடவியதால் கிடைக்கும் வருவாய்தான் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் கிடைக்கும் அதிகப்படியான வருவாய் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு நாளும் பிழைப்பு தேடி சென்னையில் அடைக்கலம் புகும் நடுத்தர வர்கத்தினர் ஏராளம் ஏராளம். அவர்களின் மாதாந்திர வருமானமும்(4,000 முதல் 5,000 வரை) சொற்பமாகவே இருக்கும். அப்படி இருக்க அலுவலகத்திற்கு தாமதமானால் எங்கே அன்றைய தினம் வீணாகிவிடுமோ என்ற பதட்டத்துடன் ஓடும் மக்களின் இக்கட்டான சூழ்நிலைகளை காசாக்கும் செயலில்தான் அரசு இறங்கி உள்ளது. ஒரு நாளைக்கு பேருந்து கட்டணத்துக்காக மட்டுமே இருபதில் இருந்து முப்பது ரூபாய் செலவு செய்தால் மாதத்தில் அந்த செலவு மட்டுமே சுமார் 900 ரூபாய் ஆகிவிடும். பஸ் பாஸ் வாங்கலாம் என்றால் அதுவும் மாதத்துக்கு 600 ரூபாய் ஆகின்றது. பத்து பந்தாவான ஏஸி, டீலக்ஸ் பேருந்துகளுக்கு பதிலாக சாதாரணமான இருபது பேருந்துகளை விடலாமே. அதனால் மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டும், படிகளில் தொங்கிக் கொண்டும் போகாமல், உயிருக்கும் ஆபத்தில்லாமல்,பாதுகாப்பாகவும்,வசதியாகவும்,நேரத்துக்கு பேருந்துகளில் பயணம் செய்ய முடியும். அதோடு மட்டுமல்ல குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவை செய்ய முடியும். அதனால், மேலும் சில இளைஞர்களுக்கு நடத்துனர் ஓட்டுநர் வேலைகளும் கொடுக்க முடியும். இதைவிட்டு விட்டு டீலக்ஸ், ஏஸி, தாழ்தளபேருந்து என்ற பெயரில் பேருந்தில் ஏறினாலே டிக்கட் ஏழு ரூபாய், பத்து ரூபாய் என்று வசூலித்தால் ஏழை மக்கள் என்ன செய்ய முடியும்.தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் ஏஸி பஸ்ஸில் ஏறினாலே இருபத்தைந்து ரூபாய் டிக்கட். ஆனால் அதிகமாக ஓடுவது ஏஸி பஸ்ஸாக உள்ளபோது பிழைப்புக்கே கஷ்டப்படும் மக்கள் அதிகப்படியான கட்டணத்துக்கு என்ன செய்ய முடியும்.கிண்டியில் இருந்து டி.வி.எஸ்வரை டீலக்ஸ் பஸ்ஸில் செல்ல கட்டணம் எட்டு ரூபாய் ஆகிறது. ஆனால் சாதாரண பஸ்ஸில் நான்கு ரூபாய்தான் கட்டணம்.டீலக்ஸ் ஏஸி என்ற பெயரில் இரண்டு மடங்கு,மூன்று மடங்கு கட்டணத்தை வசூலிப்பது கொடுமையிலும் கொடுமை. போகிற போக்கை பார்த்தால் மாநகர பேருந்துகளில் மக்கள்(நடுத்தர, ஏழை எளிய) ஏறவே முடியாது போல் உள்ளதே..! போதாக்குறைக்கு பெட்ரோல் விலைவேறு விஷம்போல் ஏறுகிறது. தமிழக அரசு மனது வைத்தால் மட்டுமே நிச்சயம் இந்த பிரச்சனையை சரிசெய்ய முடியும். தி&நகரில் இருந்து அண்ணா நகருக்கு சுமார் இருநூறுக்கும் மேல்பட்ட ஷேர் ஆட்டோ க்கள் ஓடுகின்றன. அனைத்து ஆட்டோ க்களுக்குமே நல்ல வசூல் கிடைக்கிறது. அப்படி என்றால் பேருந்துகளின் பற்றாக்குறை,நேரத்துக்கு பேருந்துகள் கிடைக்காதது போன்ற காரணங்களால்தான் மக்கள் ஷேர் ஆட்டோ க்களில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலை சென்னை முழுதுமே பரவலாக உள்ளது. அரசு பரிசீலணை செய்து மக்களின் தேவைகளை உணர்ந்து உண்மையான அக்கரையோடு செயல்பட்டால் நடுத்தர வர்கத்தின் தலையை தடவி அந்த வருமானத்தை காட்டி பெருமை அடித்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்காது.

Book stall-T-NAGAR

கொட்டிக் கிடக்குது புத்தகப் பூக்கள்
தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டி எங்கோ ஒரு சில வீடுகளில் பார்ப்பதே அரிதாக இருந்தது. ஆனால் காலத்தின் மாற்றத்தினாலும் விஞ்ஞான வளர்ச்சியினாலும் படிப்படியாக மாறி இன்று கலர் டி.வி. இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. கணினியும் அதேபோன்ற நிலையை ஒரளவு அடைந்துவிட்ட சூழ்நிலையில், கட்டுரைகள் எழுதவோ, கடிதம் எழுதவோகூட அதிகம்பேர் பேனாவை எடுப்பதில்லை.அதேபோல் உலக விஷயங்களை அறிந்துகொள்ளவும்கூட கணினி யுகத்தில் இணையதளங்கள் உதவுகின்றன. இணையதளங்களில் இல்லாத தகவல்களே இல்லை. மேலும் பொழுதுபோக்கு அம்சங்கள், கேளிக்கை விடுதிகளாகவும், டி.வி.டி.களாகவும்,கை அடக்க செல்போனின் ப்ளூடூத்களாகவும் உருவெடுத்துவிட்ட சூழ்நிலையில் புத்தகம் படிப்போர் எண்ணிக்கை எப்படி உள்ளது, புத்தகப்பிரியர்களின் நிலை என்ன? என்ற கேள்விகளோடு பிக் பஜார் என்று சொல்வார்களே அதுபோன்று சென்னைவாசிகளுக்கு விற்பனை மையங்கள் உள்ள இடங்களில் ஒன்றான தி.நகர் பாண்டிபஜார் நெடுகிலும் நடைபாதை கடைகளோடு உள்ள ஒரு சில புத்தகக் கடைகளை அனுகினோம். கடை இருப்பது நடைபாதை என்றாலும் அங்கே விற்கப்படுபவை பெரிய பெரிய படிப்பாளிகளையும், படைப்பாளர்களையும் ஈர்க்கும் புத்தகங்கள். இங்கே பழைய புத்தகங்கள் பாதி விலைக்கு கிடைக்கின்றன. ஒரு சில கடைகளில் புதிதாக வெளியிடப்படும் பதிப்பகங்களின் புதிய புத்தகங்களும் விற்கப்படுகின்றன. பாண்டிபஜார் பகுதியில் இப்படிப்பட்ட கடைகள் சுமார் ஏழெட்டு கடைகள்வரை உள்ளன. அவற்றுள் ஒரு புத்தகக் கடை உரிமையாளர் அருள்நாதன் என்பவரிடம் பேசும்போது ஑஑கடந்த பத்து வருடங்களாக இதே பகுதியில் ஒரு விற்பனை வளாகத்தில் புத்தகங்கள் விற்பனை செய்து வருகிறேன். பிளாட்பாரக் கடையை ஐந்து வருடமாக நடத்தி வருகிறேன். இங்கு அதிகமாக விற்பனை ஆவது ஆங்கில நாவல்கள், அடுத்ததாக தொழில் முதலீட்டு புத்தகங்களும், சமையல் குறிப்புகள், அழகு கலை குறித்த புத்தகங்களும் அதிகமாக விற்பனை ஆகின்றன. சுமார் இருபது பதிப்பகங்களின் வெளியீட்டில் வந்துள்ள புத்தகங்களை விற்பனை செய்கிறோம். அவற்றுள் விகடன் பதிப்பகத்தின் புத்தகங்களும் உள்ளன. விகடன் பிரசுரத்திற்காகவே ஒரு வாசகர் வட்டம் உள்ளது. அவர்களும் சில புத்தகங்களை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட வகையில் எழுத்தாளர் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், ஜக்கி வாசுதேவின் அத்தனைக்கும் ஆசைபடு,மதனின் வந்தார்கள் வென்றார்கள் போன்ற புத்தகங்களும்.பெண்களுக்கான பழகிய பொருள் அழகிய முகம் போன்ற அழகு குறிப்பு புத்தகங்களும் வாசகர்கள் வாங்கிச்செல்கின்றனர்ஒஒ என்றார். அதே பகுதியில் உள்ள வேறொரு புத்தகக் கடை விற்பனையாளரான செல்வம் கூறும்போது ஑஑ஆங்கில நாவல்களில் சிட்னி ஷெல்டன் நாவல்களும், ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் நாவல்களும், தமிழில் கல்கி சாண்டில்யன் கதைகளும் அதிக விற்பனை ஆகும். ரமணிச்சந்திரனின் புத்தகங்களை பெண்கள் விரும்பி கேட்டு வாங்கிச்செல்வதுண்டு. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற புத்தகங்களை கேட்டு வரும் வாசகர்களும் இருக்கிறார்கள். சிறுவர்களுக்கான புத்தகங்களில் தென்னாலி ராமன் கதைகள், பஞ்சதந்திர கதைகள் சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனஒஒ என்றார். இந்தப் பகுதியில் புத்தகங்களை வியாபாரம் செய்யும் விற்பனையாளர்கள் அனைவருமே சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபாதை புத்தகக் கடைகளை நடத்தி வருகின்றனர். விற்பனையை பொருத்தமட்டில் அன்றும் இன்றும் ஒரே நிலை உள்ளது அதில் சரிவு ஏதும் இல்லை என்கிறார்கள். நாவல்களையும், கட்டுரை நூல்களையும் தேடிப்பிடித்து வாங்கிச் செல்லும் தொடர்ந்து வரக்கூடிய வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உள்ளார்கள். ஒரு கடையில் இல்லாவிட்டாலும் வேறு கடை ஏதாவது ஒன்றில் வாசகர்கள் கேட்டு வரும் புத்தகங்கள் கிடைத்துவிடும். சில நேரங்களில் நாங்களேகூட நன்றாக பழக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக, கிடைக்காத புத்தகங்களை வேறு எங்காவது கேட்டு வாங்கித் தருவதும் உண்டு என்கிறார்கள். ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேலான வாடிக்கையாளர்கள் தங்கள் புத்தகக் கடைக்கு வந்து செல்வதாக சொல்கிறார்கள். இதே பகுதியில் அப்துல்லா என்பவர் ஒரு புத்தகக் கடை நடத்தி வருகிறார். ஑஑எனது தந்தை சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே இங்கு புத்தகக் கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். அப்போதெல்லாம் மூன்று அல்லது நான்கு கடைகள்தான் இருந்தன ஐந்து வருடங்களுக்கு முன்புதான் மேலும் சில கடைகள் பெருகிவிட்டன. இருந்தாலும் பெரிய அளவில் எங்கள் விற்பனையில் பாதிப்புகள் இல்லை. பெரும்பாலும் வரும் வாடிக்கையாளர்கள் சேகுவேரா, ஸ்டாலின், ஹிட்லர் போன்ற தலைவர்கள் புத்தகங்களையும் ஸ்டெஃபன் ஆர் கோவே என்ற ஆங்கில எழுத்தாளரின் செவன்த் ஹாபிட்ஸ், எய்த் ஹாபிட்ஸ் போன்ற நாவல்களையும் அதிகமாக வாங்கிச் செல்வார்கள். மல்லிகா பத்ரிநாத், தாமோதரன் ஆகியோர் எழுதிய சமையல் குறிப்புகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியா புக் ஹவுஸ் வெளியீடான டிங்கிள் என்ற சிறுவருக்கான ஆங்கில கதை புத்தகம் இல்லாத கடைகளே இருக்காதுஒஒ என்றார். வீட்டுக்குள்ளேயே உலகை அழைத்துவரும் கணினியும் இணையதளங்களும் எண்ணற்றவையாக இருந்தாலும், புத்தக பிரியர்களின் தேவையும் அறிவுப்பசிக்கான, பொழுதுபோக்குக்கான தேடல்களும் பூர்த்தியாகும் இடமாக, நல்ல நல்ல அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும்,பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட புத்தகங்களை நமக்கு கிடைக்கச் செய்யும் இடமாகவும், சிலரின் வாழ்வாதாரமாகவும் பாண்டிபஜாரின் நடைபாதை கடைகள் விளங்குகின்றன.

Wednesday, March 26, 2008

vinayagar thuthi

விநாயகர் துதி
திகடச்சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகடச்சக்கரத் தாமரை நாயகன்
அகடச்சக்கர வின்மணியாவுறை
விகடச்சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.

Monday, June 18, 2007

WELCOME TO ALL

HELLO WELCOME MY FRIENDS
நாகமணி என்ற பெயரில் பல கதைகள் கட்டுரைகள் நான் எழுதியிருக்கிறேன்.
எனது புது அவதாரம் அரிதாரம் இந்த அதிரதன் என்ற பெயர்.
இனி அடிக்கடி சந்திப்போம்.