Sunday, November 2, 2008

மனித சங்கிலி மாற்றம் தருமா?


இலங்கை தமிழர்களை இனவெறிகொண்டு சிங்கள ராணுவம் கொன்று குவித்து வருவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில் தமிழனாய் பிறந்த யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இலங்கை தமிழர்களுக்காக போராடுகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு தமிழகத்தில் அரசியல் நடத்தி அதிலும் பேறும் புகழும் சேர வேண்டும், வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் என்ற சுயநலவாதிகளின் நாடகம்தான் வேதனை அளிக்கிறது. பிறந்த நாள் என்றாலோ, பாராட்டு கூட்டம் என்றாலோ, மாநாடு என்றாலோ தமிழே, தமிழகமே, தமிழினத் தலைவரே, செந்தமிழே, செம்மொழியே என்றெல்லாம் போஸ்டர்கள் அல்லோலகல்லோலப் படுகிறது. ஆட்சி அதிகாரமும் கையில் இருக்கிறது. மத்திய அரசை தட்டிக்கேட்க தேவையான நாற்பது மத்திய மந்திரிகளும் உள்ளனர். அப்படி இருக்க எதற்காக 'இந்திய அரசே! வன்மையாக கண்டிக்கிறோம்' என்ற வசனங்களுடன் போஸ்டர்களும், மனித சங்கிலி போராட்டமும். அதனால் எந்த பலனாவது இருக்கிறதா? ஒன்றிரண்டுபேர் வாய் துடுக்காக பேசி தங்களை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொண்டதை தவிர வேறொன்றும் நடக்கப்போவதில்லை. அன்றைய ஒருநாள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தமிழக மக்கள் அவஸ்தை பட்டதுதான் மிச்சம். தமது மகள் மகன் உட்பட கட்சிக்காரர்களை மத்திய மந்திரிகளாக்கி தேவையான இலாக்காக்களை மிரட்டி வாங்க டெல்லிக்கு ஓடும்போது இருந்த மனநிலை இப்போதும் வரவேண்டுமே!அவரல்லவோ தமிழினத் தலைவர். இலங்கை தமிழர் பிரச்னைக்குமட்டும் மக்கள் லட்சக்கணக்கில் பிரதமருக்கு கடிதங்கள் எழுத வேண்டுமாம். இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி தருவதை தடை செய்யவும், தமிழக மீனவர்களின் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுக்கவும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தலாமே! 'தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாவேன். நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம். நான் கவிழ்ந்துவிடமாட்டேன்' என்று சொன்னால் போதாது செயலும் இருக்கவேண்டும். மத்திய அரசுக்கு தரும் ஆதரவை வாப்பஸ் பெறுவோம் என்று கூறி நாடகத்தை அறங்கேற்றிய கையோடு அடுத்து வசூலில் இறங்கிவிட்டது வேதனையாக உள்ளது. சூனாமி வசூல்கூட பலபேரை பணக்காரர்களாக்கியது.இதுவும் அப்படி ஆகிவிடாமல் இருந்தால் சந்தோஷம். இலங்கை தமிழர்கள் குற்றுயிரும் குறையுயிருமாக ரத்தவெள்ளத்தில் கிடக்கும் புகைப்படங்களை பார்த்து கண்ணீர் வடித்தால் போதுமா? எஞ்சி இருப்போரை காப்பாற்ற அது எந்தவிதத்திலும் உதவாது. தமிழகத்தில் எத்தனை கிலோமீட்டருக்கு மனித சங்கிலி கோத்தாலும் எந்த மாற்றத்தையும் காண முடியாது. இது ஒரு பம்மாத்து வேலையே. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு முடிவெடுத்து செயல்படுத்த முனைவதே சரியான செயலாகும். மத்திய அரசின் மழுப்பல்களுக்கு செவிசாய்த்தது தமிழினத்துக்கு செய்த பச்சை துரோகமாகும். கொன்று குவிக்கப்படும் தமிழர்களின் அவல நிலையை அரசியலாக்கி ஆதாயம் தேடி அசிங்கப்படுத்திவிடாதீர்கள்.பேரணிகள் ஆர்ப்பாட்டங்களைவிட அதிகாரம் சக்திவாய்ந்தது பொதுநலத்துக்கும், மக்கள் நலனுக்காகவும்கூட பயன்படுத்தினால் கட்டாயம் இலங்கை தமிழர்களுக்கு நிம்மதியை தரமுடியும்.


No comments:

Post a Comment