Friday, January 25, 2013

முடிந்தது புத்தகத் திருவிழா


தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம், அண்ணா சாலை காயிதேமில்லத் கல்லூரியில் சிறிய எண்ணிக்கையில் அரங்குகளை அமைத்து, கண்காட்சியைத் தொடங்கி நடத்தியது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அரங்குகளின் எண்ணிக்கை கூடியதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் கடந்த ஆண்டு வரை (2012) கண்காட்சியை நடத்தியது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நடக்கும் வேலைகளினால், இந்த ஆண்டு எங்கே நடத்துவது என சிக்கலில் இருந்தது. ஒருவழியாக முடிவு செய்து, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் சுமார் 750 அரங்குகள் அமைக்கப்பட்டு,  அங்கு 36 வது புத்தகக் கண்காட்சி 11.1.2013 மாலை தொடங்கி 23.1.2013 வரை கோலாகலமாக நடந்து முடிந்தது.
அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, சிவபதி, மேயர் துரைசாமி ஆகியோர் புத்தக காட்சியை தொடங்கி வைத்தனர். முதல்நாள் துவக்க விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 7 எழுத்தாளர்களுக்கு பபாசி விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த புத்தக காட்சியில் சுமார் 60 லட்சத்துக்கும் மேலான புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளன. சுமார் 12 கோடி ரூபாய் அளவில் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. வாசகர்களின் வருகை 10 லட்சத்துக்கும் மேல் இருந்துள்ளது. எப்போதும் போல் வெளி ஊர்களில் இருந்தெல்லாம் ஏகப்பட்ட படிப்பாளர்களும், படைப்பாளர்களும், இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும், அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும், விஜயம் செய்தனர். ஆனால், சில நாட்கள் சில அரங்குகளில் டல்லடித்த சம்பவமும் நடந்தது. எப்படியோ ஒருவழியாக புத்தகத் திருவிழா நல்லபடியாக முடிந்துவிட்டது. ஒரு சில அசௌகரியங்கள் இந்தப் புது இடத்தில் இருந்தது. அந்த அசௌகரியங்களும் களையப்பட்டிருந்தால் இன்னும் கோலாகலமாக இருந்திருக்கும் இந்த 36வது புத்தகக் காட்சி. இதன் மூலம் ஒன்று மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது. லேப்டாப், செல்போன்களெல்லாம்  படிப்பதற்கான சகல வசதிகளைக் கொடுத்தபோதும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் மக்களின் எண்ணம் குறையவில்லை. இது குறையாத வரை புத்தக பதிப்பாளர்களின் காட்டில் மழைதான்.

No comments:

Post a Comment