Tuesday, January 8, 2013

நிதர்சனமான உண்மை!

அன்று இந்தியாவில் இருந்து சென்று சகோதர சகோதரிகளே என்று சிகாகோவில் சொற்பழிவாற்றி, உலகையே தன்பக்கம் ஈர்த்தார் விவேகானந்தர். இன்று அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து இந்து சமயத்தின் பெருமையை பகவத் கீதையை பதவியேற்க சாட்சியமாக்கி உலகையே தன்வசம் திரும்பச் செய்திருக்கிறார் ஒருவர். ஆம், அமெரிக்காவின், ஹவாய் பகுதியைச் சேர்ந்த, துளசி கபார்டு, பகவத் கீதையைப் படித்து, எம்.பி&யாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்காவில், கடந்த 2012&ம் ஆண்டு, நவம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஹவாய் பகுதியிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் துளசி கபார்டு (31), பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள், எம்.பி&க்களாக பதவி ஏற்றனர்.
துளசி கபார்டு, இந்தியர் அல்ல. இவருடைய தந்தை, மைக் கபார்டு, தற்போது செனட்டராக உள்ளார். இவரது தாய் கரோல் போர்டர், கல்வி அதிகாரியாக உள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர், ஜான் போனர், புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது துளசி கபார்டு, பகவத் கீதையைப் படித்து, உறுதி மொழி ஏற்றுள்ளார்.
இதுகுறித்து துளசி கூறியதாவது: “பகவத் கீதை, மன அமைதியை தருவது. வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில், நமக்கு வழிகாட்டுவது. இளம் பருவத்திலேயே, பகவத் கீதை எனக்கு கற்பிக்கப்பட்டது. என் தாய் இந்து. தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவராக இருந்தாலும், அவரும் மந்திர ஜபம் செய்கிறார். இதனால்தான் எனக்கு, இந்து மதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.” நிதர்சனமான உண்மையை, நித்தியமான பெருமையை உணர்வுபூர்வமாக உலக அரங்கில் உறுதிமொழியாக உணர்த்தியிருக்கின்றார் துளசி கபார்டு.

Friday, January 4, 2013

பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்!


டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணமடைந்துவிட்ட நிலையிலும் அந்தக் குற்றத்துக்கான தண்டனையை குற்றவாளிகளுக்கு வழங்கவே மக்கள் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. இது வெக்கக் கேடான விஷயம். போஃபஸ் ஊழல், மாட்டுத் தீவன ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், கொலை வழக்குகள் ஆகியவற்றில் சர்வசாதாரணமாக தப்பித்துக் கொண்ட அரசியல்வாதிகளுக்கு இன்னும் ஒரு போனஸ் கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றம் தனது வரம்பு எது என்று சொல்லியிருப்பதுதான் அது.டெல்லி மாணவி பலாத்காரத்தைத் தொடர்ந்து பல வித விவாதங்களும் வழக்குகளும் மக்களால், பொதுநலச் சிந்தனையாளர்களால் தொடுக்கப்பட்டு வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருக்கும் கருத்து சில அரசியல்வாதிகளுக்கு உச்சி குளிரச் செய்திருக்கும். பலாத்கார குற்றங்களில் தொடர்புள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னாலும் அனைவருக்கும் சட்டம் சமம் என்பதை மறந்துவிடக் கூடாது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். பிட்பாக்கெட் அடிப்பவனையும், பசிக் கொடுமையால் திருடுபவனையும் தண்டிக்கும் சட்டம் பதவியில் இருக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் குற்றவாளிகளையும் பாரபட்சமின்றி தண்டித்தால்தான் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை சாகாமல் இருக்கும். கழுவுகிற மீனில் நழுவிடாமல் சட்டம் தன் கடமையை செய்திட வேண்டும். சட்டம் உண்மையிலேயே இருட்டறை ஆகிவிடக் கூடாது.

Thursday, October 11, 2012

ஓட்டைப் படகு சவாரி...

இலங்கையில் இருந்து இந்தியா வந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்துள்ளனர். இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் உரிமைகளை வழங்குவது குறித்து இலங்கை அரசை வற்புறுத்துமாறு, எஸ்.எம். கிருஷ்ணாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பக்கத்து மாநில தமிழர்களுக்கு காவிரி நதி நீர் கிடைப்பதே பிடிக்காத இவரா இலங்கையில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்போகிறார். தமிழகத்தில் இனம் அழிய காரணமானவர்களின் கூடாரத்தில்தானே அவரும் இருக்கிறார். ஓட்டைப் படகில் சவாரி செய்வதும் எஸ்.எம். கிருஷ்ணாவை நம்புவதும் ஒன்றுதான். தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவரும் இலங்கை கப்பற்படையை தட்டிக் கேட்கவே மத்திய அரசு இம்மியளவும் முயற்சிக்கவில்லை. ஒரு கண்டனக் குரல் கொடுக்கவே திராணியற்று இருக்கிறார்கள். கசாப்புக் கடைக்காரனிடம்   மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா?   

Wednesday, October 10, 2012

தமாசு கண்ணா... தமாசு..!


ஆட்சியில் நேர்மையான, நிர்வாகம் நடப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊழல் இல்லாத நிர்வாகத்தை மேற்கொள்ள, ஊழல் ஒழிப்பு சட்டத்தை வலுவானதாக்க வேண்டும். அதற்காக அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்படும். அப்படி இல்லையெனில் ஊழல் பெருகி, எதிர்மறையான ஒரு சூழல் ஏற்பட்டு நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திவிடும். மேலும் ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி பேசியது யார் தெரியுமா? நம்ம பிரதமர்தான். சி.பி.ஐ.யின் 19வது மாநாட்டில் நாட்டின் புகழுக்காக ரொம்பவே கவலைப்பட்டுள்ளார். படிக்கும்போதே தமாசா இருக்குமே..! என்ன பண்றது எல்லாமே நம்ம தலையெழுத்து. சாத்தான் வேதம் ஓதுவதாக ஒரு பழமொழி கேள்விப்பட்டுள்ளேன் அது நினைவுக்கு வருகிறது.

Friday, September 7, 2012

பார்த்தது பிடித்தது


பொதுவாக வாகனங்களின் பின்னால், சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே, பத்து அடி இடைவெளி விட்டு வரவும் என்பது போன்ற வார்த்தைகள் இருப்பது சாதாரணம்.
சமீபத்தில் ஒரு வாகனத்தின் பின்னால் எழுதியிருந்த வாசகம் & 100&ல் பயணம் செய்தால்... 108 பின்னால் வரும்! என்பதுதான்.
உயிரோட்டம் கலந்த உண்மை.

உன்னால் முடியும்..!

விட்டத்தை முறைத்துப் பார்த்தால்
விட்டதை அடைய முடியாது
சோம்பலைப் பழித்துவிட்டு
சிற்றெரும்பாய் செயல்பட்டால்
சிகரத்தின் உச்சிகூட
சிறுமலையாய் தோன்றும்.


Friday, August 31, 2012

சுயநலப் பேய்கள்!

ஈழத் தமிழர்
சிங்களர்களிடம் சிக்கிச் சீரழிந்தபோதும்
ஆதாயம் தேடினார்கள்
இறந்தபோதும் பிணங்களைக் காட்டி
ஆதாயம் தேடினார்கள்
இனமே அழிந்த பின்னும்
ஆதாயம் தேடுகிறார்கள்
டெசோ என்ற முகமூடியுடன்!

Thursday, July 26, 2012

வாழு வாழ்ந்து விடு..!



இந்த பூவுலகில் நாம் வந்து பிறந்தது நாம் எடுத்த முடிவு அல்ல. அப்படியிருக்க சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனம் உடைந்துபோவதும், தவறான முடிவெடுத்து தன்னையே மாய்த்துக் கொள்வதும் பைத்தியக்காரத்தனம். ஒருமுறை ரயிலில் பயணிக்கும்போதோ, கோயில்களுக்குச் செல்லும்போதோ அங்கே கண்கள் தெரியாதவர்களும், கால் ஊனமானவர்களும் வியாபாரம் செய்வதைப் பாருங்கள். அவர்கள்கூட வாழ்க்கை நடத்த வழி தேடி, நம்பிக்கையோடு செயல்படுகிறார்கள்.
அப்படி இருக்க, எல்லாவிதத்திலும் சௌகரியமான நம்மால் வாழ முடியாதா என்ன? வாழ நினையுங்கள் கட்டாயம் வழி கிடைக்கும்.

Friday, January 7, 2011

தமிழின் பெயரால் தலைவர்களாகும் சுயநலவாதிகள்

தமிழையும் தமிழ் மக்களையும் காக்க உயிரையும் கொடுப்பேன் என்று சொல்லிக்கொண்டே உறவுகளுக்கு சொத்து குவிப்பது, வாழ்க்கையை சொர்கபுரி ஆக்கிக்கொள்வது சகஜமாகிவிட்டது.எதன் மீதோ மழை பெய்வதைப் போல் தமிழர்களும் இவர்களிடம் ஏமாறுவது பழகிப் போய்விட்டது.ஐயகோ....! கொடுமையிலும் கொடுமை இது.