பான்பராக் பைத்தியங்கள்
வயதானவர்கள் அசைபோட்டுக் கொண்டே இருப்பதை நாம் நமது வீடுகளிலும் வெளிவட்டாரங்களிலும் கட்டாயம் பார்த்திருப்போம். வெற்றிலை பாக்கு போடுவதென்பது டீ,காபி குடிப்பது போன்ற பழக்கங்களில் ஒன்றாக நமது முன்னோர்களிடம் அன்றைய நாட்களில் இருந்த ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.வெற்றிலை பாக்கை சிலர் மெல்ல முடியாவிட்டால், அதற்காக சிறிய இரும்பால் ஆன உரலையும் அதற்கு தக்க உலக்கையையும் வைத்து இடித்து, தூளாக்கி வாயில் போட்டு மென்றுகொண்டு வீட்டு திண்ணைகளில் அமர்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அவர்கள் கூட இன்றைய இளைஞர்களைபோல அசைபோட்டிருக்க முடியாது. இவர்களைப்போல சுற்றுப்புறங்களை நாசமாக்கி இருக்கவும் முடியாது. வயதானவர்களில் சிலர் வெற்றிலை பாக்கை மென்று அந்த எச்சிலை துப்ப ஒரு பழைய டப்பாவில் மணலைகொட்டி, அதில் எச்சிலை உமிழ்ந்து ஒரு ஓரமாக கொட்டிவிடுவார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களிடம் தொற்று நோய்போல் பரவும் சிகரெட் பிடிப்பது,மது அருந்துவது,பீடா என்ற வரிசையில் பிரசித்தமானது, போதை மற்றும் வாய் புற்றுநோயையே உருவாக்ககூடிய மோசமான பான்பராக் பழக்கம்.ஒரு நாளைக்கு பத்துக்கும் மேலான பாக்கெட்டுகளை சர்வசாதாரணமாக மென்று துப்பும் மிஷின்களாக நிறைய இளைஞர்கள் உள்ளனர். பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் இந்த பழக்கத்துக்கு அடிமை ஆகும் இளைஞர்கள் அதன் விபரீதத்தை அறியாமல் சரம் சரமாக மென்று தள்ளுகிறார்கள்.பணத்தை செலவழித்து அவர்களின் உடல் நிலையையும் நாசமாக்கிக்கொண்டு சுற்றுப்புறத்தையும் சீரழித்துவிடுகிறார்கள். ரயில் நிலையங்களின் தரைகளையும்,சுரங்க நடைபாதை சுவர்களையும், படிக்கட்டுகளையும்,பேருந்துகளையும் நாரடித்துவிடுகிறார்கள். ஏன்! சில சமயங்களில் ஆட்கள்மீதே துப்பி சிக்கலுக்கு உள்ளாவதும் உண்டு. சமீபத்தில் நங்கநல்லூரில் இருந்து உயர் நீதிமன்றம் வரை செல்லும் 52பி ஒ மாநகரப்பேருந்தில் நான் அமர்ந்திருந்த சீட்டுக்கு முன் சீட்டில் அமர்ந்து பயணம் செய்த ஒரு டிப்டாப் வாலிபர் வாயை அசைபோட்டுக்கொண்டே வந்தார். பேருந்து கிண்டி வருவதற்குள்ளாக பல முறை எச்சிலை ஜன்னல் பக்கமாக துப்பிக்கொண்டே வந்தார். அதிலும் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போது துப்பினால் காற்றில் பறந்து பக்கத்து சீட்டில் உள்ளவர்கள் மீது படுமே என்ற சாதாரண விஷயத்தை கூட பொருட்படுத்தாமல் துப்பிக்கொண்டே வந்தார். நான் சொல்லிப்பார்த்தேன் அவர் கேட்பதாக தெரியவில்லை. பேருந்து சைத்தாப்பேட்டை வந்தபோது மீண்டும் தலையை நீட்டி எச்சிலை துப்பினார். பாவம் பேருந்தின் பக்கத்தில் டூ&வீலரில் வந்த ஒருவரின் அழகான வெள்ளை வெளேர் சட்டையை நாசமாக்கிவிட்டார். டூவீலரில் வந்தவர் எக்கச்சக்கமான கோபத்தில் வாயில் வந்தபடி அவரை திட்டியதோடு, டூவீலரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு ஜன்னல் வழியாகவே எம்பி எச்சில் துப்பிய வாலிபரை கண்ணத்தில் இரண்டு அடியும் கொடுத்தார். வாலிபர் மன்னிப்புக் கேட்டும் டூ&வீலர்காரரின் கோபத்தில் இருந்து தப்ப முடியவில்லை.பேருந்தில் அதுவரை வேடிக்கை பார்த்தவர்களின் வசைமழைக்கும் தப்ப முடியவில்லை. பெரியவர்கள் சொல்லுவார்கள், ''ஒன்று சொல்புத்தி வேண்டும் அல்லது சுயபுத்தி வேண்டும்'' என்று. சொல்லியும் கேட்கவில்லை, சுயமாகவும் யோசிக்கவில்லை அந்த பான்பராக் இளைஞர் அதன் விலைவுதான் கண்ணத்தில் விழுந்த அடி.பான்பராக் பைத்தியம் படுத்தும்பாடு அசௌகரியத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதோடு, சுற்றுப்புறத்தை நாசமாக்கும் நாசகார சக்தியாகவும் உள்ளது.இந்த பொழுதுபோக்காக ஆரம்பித்த பழக்கம் முடிவில் நம்மையே அழித்துவிடும். விபரீதம் உணர்ந்து பான்பராக்கை மறந்து, பண்போடு இன்புற்று வாழ்வோம் இளைஞர்களே.
No comments:
Post a Comment