இந்தியாவின் தோல்வி காங்கிரஸின் வெற்றி
உலக அரங்கில் பாரதம் ஜனநாயக நாடாக இன்று தெரிந்தாலும், இங்கு நடப்பது மன்னராட்சிதான். என்ன நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது தனது கைத்தடிகளை பிரதம மந்திரி பதவியில் அமர வைத்து ஆட்சிக்கட்டிலை நடத்தி வருகிறது காங்கிரஸ் கட்சி. நமது தேசம் ஆங்கிலேயர்களிடம் அடிமைபட்டிருந்தபோது சுதந்திர காற்றை சுவாசிக்க செயல்பட்ட இயக்கங்களும் தலைவர்களும் ஏராளம். நாட்டின் விடுதலைக்காக உடமைகளையும்,உயிரையும் இழந்தவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட இயக்கங்களுள் ஒன்று காங்கிரஸ், இன்றுள்ள காங்கிரசுக்கு நேர்மாறானது அன்று காந்தியடிகள் வழிநடத்திய காங்கிரஸ். அன்று தேச மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் விடுதலைக்காகவும் காங்கிரஸ் இயங்கியது. இன்று பதவி மோகத்துக்காகவும், சுயநல நோக்கத்துக்காகவுமே காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதனை குறிப்பாக தற்போதைய மத்திய அரசு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றம்,அத்யாவசிய பொருட்களின் விலை ஏற்றம்,பொருளாதாரத்தில் பணவீக்க விகிதம் அதிகமாகிக்கொண்டு வருவது, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம்,விவசாயிகளின் தொடர் தற்கொலை அவலம், இவ்வளவு சிக்கல்களையும் வைத்துக்கொண்டு, அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட, இந்தியாவின் எதிர்காலத்தையும் சூன்யமாக்கிட துடித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் ஆட்சி. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் எப்படிப்பட்ட விலைவுகளை உண்டுபண்ணும் என்பதை கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மன்மோகன்சிங் அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்தியாவை அமெரிக்காவுக்கு அடமானம் வைக்க, கோடான கோடி மக்களின் வாழ்வை இருட்டடைய செய்ய துடித்துக்கொண்டிருக்கிறார். ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அமெரிக்காவின் விகார முகத்தை நாம் போகப்போகத்தான் பார்க்கப்போகிறோம். பொருளாதார மேதை, பெரிய அறிஞர் என்றெல்லாம் உயர்வாக எண்ணி இந்திய மக்கள் பிரதமராக ஏற்றுக்கொண்ட மன்மோகன்சிங், அவர்களின் உணர்வுகளை காலில்போட்டு நசுக்கிவிட்டார். விலைகொடுத்து எம்.பி.க்களை வாங்கி பதவியை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு காங்கிரஸ் தரம் தாழ்ந்துவிட்டது. நாட்டின் நலனைப்பற்றி கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், தான்தோன்றித்தனமாக செயல்படுபவராகவும், சோனியாவின் சொல்லுக்கு பம்பரமாக சுழலும் தலையாட்டி பொம்மையாகவும் உள்ளார் மன்மோகன்சிங். கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும், நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுவிட்டார் மன்மோகன்சிங். பேரம் பேசப்பட்டு கோடிக்கணக்கான பணத்தினால் எம்.பி.க்களை விலைக்கு வாங்கி மன்மோகன் அரசு வெற்றி பெற்றது கண்டிக்கதக்கது என்ற கம்யூனிஸ்டு மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உலக அரங்கில் இந்தியாவை வெட்க்கித் தலைகுனிய வைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கும் மன்மோகன்சிங்குக்கும் வேண்டுமானால் இது மகத்தான வெற்றியாக இருக்கலாம், ஆனால் இந்தியாவும் இந்திய மக்களும் நல்ல தலைமையை, நாட்டின் நலன் கருதும் உத்தமமான தலைவரை தேர்ந்தெடுப்பதில் மாபெரும் தோல்வியடைந்துவிட்டனர் என்பதே நிதர்சனமான உண்மை.பாகிஸ்தானில் தனது தாக்குதலை அத்துமீறி துவங்கியுள்ள அமெரிக்கப் படை, அணுசக்தி ஒப்பந்தம் என்ற அடிமைசாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டுவிட்டால் பிறகு இந்தியாவிலும் தனது அடாவடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.பொறுப்பற்ற,திறமையற்ற,தைரியமற்ற தலைமையை தவறாக தேர்ந்தெடுப்பவர்கள் சந்திக்க வேண்டிய இன்னல்களைதான் இந்திய மக்களும் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment