என்னைப் பற்றி அன்புள்ளங்கள்!

இப்பகுதியில் என்னைப் பற்றி
என் நண்பர்களின் கருத்துக்களை
சிரத்தையுடன் கேட்டு வாங்கி,
தொகுத்து எழுதிக் கொண்டிருக்கும்
ஸ்ரீபத்மகிருஷ் அறகட்டளை(Sripathmakrish Trust)
 அமைப்பிற்கு 
என் மனமார்ந்த நன்றி!
அதிரதன்
 
 
திரு. என். சடகோபன்
 
வணக்கம்.
திரு.நாகமணி அவர்களைப் பற்றி குறிப்பிட வேண்டுமென்றால் எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை கட்சிதமாக முடித்துக் கொடுக்கக் கூடியவர்.
மீண்டும் மீண்டும் நினைவு படுத்திட வேண்டிய அவசியம் இருக்காது.
எப்போதும் மென்மையாகப் பேசக் கூடியவர்.
எளிமையை கடைபிடிப்பவர்.
கட்டுரையை சுருக்கமாக அதேநேரத்தில் சொல்ல வேண்டியவற்றை தெளிவாக சொல்லிவிடும் பழக்கம் உள்ளவர்.
நான் அவரை பல வருடங்களாக அறிவேன்.
ஆனால் அவருடன் நெருங்கிப் பழகியது இல்லை.
நான் விஜயபாரதம் ஆசிரியராக வருவதற்கு முன்பே அவர் விஜயபாரதத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.
ஆண்டு தோறும் தீபாவளி சிறப்பு மலருக்காக ஆலோசனை செய்திட அழைத்த போதெல்லாம் வந்து உதவிடுவார். அவ்வப்போது அலைபேசி வாயிலாக உரையாடுவோம்.



செங்கோட்டை ஸ்ரீராம் 



News Editor,
Express Network Pvt Ltd.,



 



என் பத்திரிகைப் பிரவேசம் ஒரு தேசிய வார இதழில் தொடங்கியது. அப்போது நான் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். கட்டுரைகள் எழுதுவது, ஆங்கிலம்- இந்தியில் இருந்து மொழிபெயர்ப்பது, எடிட் செய்வது, வடிவமைப்பது என்பதெல்லாம் அங்குதான் பழக்கமானது.
எல்லாம் முடித்து இறுதிக் கட்ட ஃபைனல் செக்-அப் செய்து பிறகு அச்சுக்கு அனுப்புவார்கள். அந்தக் கட்டத்தில் அங்கே ஒருவர் இருந்தார். ஒவ்வொரு பக்கத்தையும் எழுதி வைத்து, தலைப்பு, பை-லைன், டேட்-லைன், பக்கம் எண், படங்கள் குறிப்பு, படங்கள் சரிபார்ப்பு என்று வரிசையாக எழுதி வைத்திருப்பார். நாம்தான் எல்லாவற்றையும் செய்கிறோமே, இவர் எதற்கு இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறார் என்று நினைத்தேன். ஒரு நாள்... கடைசிக் கட்டத்தில் தலைப்பில் உள்ள ம- வைக் கொண்டு வந்து காட்டினார். என்ன நண்பா... இந்தத் தலைப்பு மிகப் பொருத்தமாக இருந்திருக்குமே!

இவர் என்ன சொல்கிறார் என்று ஊன்றிப் பார்த்தால் தெரிந்தது - தலைப்பு கொட்டை எழுத்தில்... "நமக்கு நாமமே!" திட்டம் என்று! எனக்கு பக் என்றாயிற்று. நமக்கு நாமே திட்டம் - தலைப்பு இப்படியாகிப் போனதில்!

அப்போதுதான், அவரது உழைப்பின் பொருள் புரிந்தது. எல்லாவற்றையும் செக் செய்து, டிக் அடித்து, பிறகுதான் அச்சுக்கு அனுப்பும் அவரது செய்கை, பின்னாளில் எனக்கு மிகவும் கைகொடுத்தது. அந்த நண்பரே இதழின் நூலகத்தையும் புகைப்பட தொகுப்பையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

கணினி அச்சு வருவதற்கு முன்பு, கைகளில் எடுத்து ஒட்டிக் கொண்டிருந்த காலம். கூகுள் பிரபலமாகவில்லை. இந்த நண்பரே புகைப்படம் எதுவும் கேட்டால் உடனே எடுத்துத் தருவார். கட்டுரை எழுதும்போது புத்தகம் ரெபரன்ஸுக்கு என்று ஏதாவது கேட்டால் உடனே தருவார். அந்த அளவுக்கு அவரிடம் ஆவணப்படுத்தும் நுணுக்கம் இருந்தது. இதுவும் எனக்கு ஒரு பயிற்சியாக அமைந்தது. இன்று என் வீட்டில் புத்தகங்கள் தாறுமாறாக இறைந்து கிடப்பதைப் பார்க்கும்போதெல்லாம் அந்த நண்பரின் உழைப்பும் அறிவுரையும்தான் நினைவுக்கு வரும்.

சரி... நண்பர் யாரெனச் சொல்லாவிட்டால் எப்படி?
அவர் பெயர் நாகமணி. என்னிலும் இரண்டு வயது மூத்தவர்தான். ஆனாலும் மரியாதையும் அன்பும் மிகவும் வைத்திருப்பார்.

பின்னாளில் நான் மஞ்சரி இதழில் ஆசிரியரானேன். அப்போதும் அவர் தொடர்பை விரும்பிப் பெற்றேன். அவர் சுதேசி செய்தி என்ற பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றினார்.

 
குடும்பம் இருப்பது மங்கலம்பேட்டையில். மனைவி, குழந்தை. சென்னையில் தாய்- தந்தை. இவர் இரண்டு இடத்துக்கும் மாறி மாறிச் சென்றுவருவார்.
உடல் நிலை சரியில்லாத பெற்றோருடன் இருந்து அவர்களுக்கு பணிவிடை செய்வதில் அவருக்கு அவ்வளவு விருப்பம். அந்த ஒன்றே எனக்கு மிகவும் பிடித்துப் போனது. பின்னாளில் நான் விகடன் நிறுவனத்தில் புத்தகத் துறையில் பொறுப்பாசிரியர் பணிக்குச் சேர்ந்தபோது, எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் நாகமணியே! உடனே அவரை விகடனில் சேருமாறு கேட்டுக் கொண்டேன். அதன் பின்னர் எத்தனையோ புத்தகங்கள் பிரசுரம் மூலம் வெளிவந்தது. அனைத்திலும் அவரது ஃபைனல் செக்-அப்பும் நேர்த்தியாக அச்சுக்கு அனுப்பும் செய்முறையும் தொடர்ந்தது... தொடர்ந்துவருகிறது.

நண்பர் நாகமணியிடம் நான் கற்றுக் கொண்டது சில, பார்த்துத் தெரிந்துகொண்டது சில. அந்த வகையில் அவரும் எனக்கு ஒரு ஆசானே.