Friday, October 24, 2008

கவலை வேண்டாம் கைதிகளே....

நீங்கள் கொலை கொள்ளை செய்துவிட்டு சிறையில் உள்ளவரா? ஆள்கடத்தல், போதைபொருள் கடத்தல், பச்சிலம் குழந்தைகளையும் கன்னியரையும் கற்பழித்து கைதானவரா? கவலையை விடுங்கள் கூடிய விரைவில் உங்களுக்கும் விடுதலை கிடைத்துவிடும். தனது தற்போதய ஆட்சிக்காலத்தில் வறுமையில் வாடும் ஏழை எளியோரை விடவும் சிறையில் வாடும் சமுதாய (குண்டர்கள்) தொண்டர்களிடம்தான் நம் தலைவர் இரண்டுமுறை கருணையை காட்டியுள்ளார். அதுவும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகத்தான் எப்படியும் அடுத்த மாதமோ அதற்கடுத்த மாதமோ ஏதாவது ஒரு தலைவரின் பிறந்தநாளோ நினைவுநாளோ வராமல் போகாது. அப்போது சிறையில் உள்ள மற்றவர்களும் வெளியில் வந்து விடலாம். ஆனால் அதற்குள் அவசரப்பட்டு கோவையை சுடுகாடாக்கியவர்களாக கூறப்படுவோர் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போஸ்ட்டர்களை ஒட்டிவிட்டனர். ஏற்கனவே கோவை குண்டுவெடிப்பு தொடர்பான கைதிகள் பாதிபேர் விடுதலையாகி விட்டனர். அவசரப்பட்டால் எப்படி? பொறுமையாக இருந்தால் எப்படியும் மகன் மகள், பேரன் பேத்தி பிறந்தநாளாவது கொண்டாடப்படும்போது விடுதலையாகிவிடலாம் அல்லவா? இந்தியாவின் பிரதமர் ராஜிவ்காந்தியை கொன்றவர்களிடமே கருணையை பொழியும் தலைவர், சாதாரணமான மக்கள் அறுபது பேரை கொன்றவர்களிடம் கருணை காட்டாமல் இருந்துவிடுவாரா என்ன? கொஞ்சம் பொருமையாய் இருங்கள். அண்ணா நூற்றாண்டு விழாவில் விடுதலையாகிவந்த, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கொலை வழக்கிலும், தா. கிருஷ்ணன் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்ட பெரும் புள்ளிகள் வெளியே வந்த தும் வராததுமாக நான்கு நாட்களிலேயே தனது சமூக சேவையை (வெட்டு, குத்து) தொடங்கி விட்டார்கள். சமீபத்தில் மதுரையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தோழர்கள் மீதும், எதிர் கட்சியினர் மீதும் ஆயுதங்களை பிரயோகித்துப் பார்த்து விட்டனர். ஏற்கனவே கொலை கொள்ளை தலை விரித்தாடுகிறது.கோயில் உண்டியலைக்கூட காவலாளிகளை கொன்றுவிட்டு கொள்ளையடித்துச் செல்கின்றனர். போதாக்குறைக்கு 1405 சிறைக் கைதிகளை அண்ணாவின் நூற்றாண்டு விழாவை காரணம் காட்டி வெளியே விட்டிருக்கிறார்கள். மதுரை வாரிசு மனம் மகிழவே இந்த கைதிகள் விடுதலை என்று பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. மதுரையில் தனி ராஜ்யமே நடப்பது ஜனநாயகத்துக்கு சவக்குழி வெட்டியாகிவிட்டதையே உணர்த்துகிறது. சொந்த பந்தத்தையே கண்ணில் விரலை விட்டு ஆட்டும்போது, (கேபிள் டி.வி உலகில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த சன் நிர்வாகத்தையே படாதபாடு படுத்தும்போது) சாதாரண மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. ஆகமொத்தத்தில் அதிகார வர்க்கத்தின் ஆணவ ஆட்டம் மக்களை நிலைகுலையச் செய்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. எது எப்படியோ மக்களுக்கு நீதித்துறை மீதும் காவல்துறை மீதும் கொஞ்சமாவது நம்பிக்கை இருந்திருக்கும் அந்த கொஞ்ச நம்பிக்கையும்கூட இனி இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

Wednesday, October 22, 2008

உழைப்பாளி


உதிரத் துளிகளை உழைப்பாலே
வியர்வையாய் சிந்துபவன்
பகிர்ந்துண்டு வாழ பழகியவன்
இரந்துண்டு வாழத் தெரியாதவன்
நாடி நரம்புகள் மட்டுமல்ல...
உள்ளத்திலும் உறுதி படைத்தவன்
அண்டியோர் வயிறு நிறைய...
அடிமாடாய் தேய்பவன்
மெழுகாய் உறுகி ஒளியாய் மாறுபவன்
வறுமைக்கோட்டின் நிறந்தர வாரிசு அவன்.