Thursday, October 11, 2012

ஓட்டைப் படகு சவாரி...

இலங்கையில் இருந்து இந்தியா வந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்துள்ளனர். இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் உரிமைகளை வழங்குவது குறித்து இலங்கை அரசை வற்புறுத்துமாறு, எஸ்.எம். கிருஷ்ணாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பக்கத்து மாநில தமிழர்களுக்கு காவிரி நதி நீர் கிடைப்பதே பிடிக்காத இவரா இலங்கையில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்போகிறார். தமிழகத்தில் இனம் அழிய காரணமானவர்களின் கூடாரத்தில்தானே அவரும் இருக்கிறார். ஓட்டைப் படகில் சவாரி செய்வதும் எஸ்.எம். கிருஷ்ணாவை நம்புவதும் ஒன்றுதான். தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவரும் இலங்கை கப்பற்படையை தட்டிக் கேட்கவே மத்திய அரசு இம்மியளவும் முயற்சிக்கவில்லை. ஒரு கண்டனக் குரல் கொடுக்கவே திராணியற்று இருக்கிறார்கள். கசாப்புக் கடைக்காரனிடம்   மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா?   

Wednesday, October 10, 2012

தமாசு கண்ணா... தமாசு..!


ஆட்சியில் நேர்மையான, நிர்வாகம் நடப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊழல் இல்லாத நிர்வாகத்தை மேற்கொள்ள, ஊழல் ஒழிப்பு சட்டத்தை வலுவானதாக்க வேண்டும். அதற்காக அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்படும். அப்படி இல்லையெனில் ஊழல் பெருகி, எதிர்மறையான ஒரு சூழல் ஏற்பட்டு நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திவிடும். மேலும் ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி பேசியது யார் தெரியுமா? நம்ம பிரதமர்தான். சி.பி.ஐ.யின் 19வது மாநாட்டில் நாட்டின் புகழுக்காக ரொம்பவே கவலைப்பட்டுள்ளார். படிக்கும்போதே தமாசா இருக்குமே..! என்ன பண்றது எல்லாமே நம்ம தலையெழுத்து. சாத்தான் வேதம் ஓதுவதாக ஒரு பழமொழி கேள்விப்பட்டுள்ளேன் அது நினைவுக்கு வருகிறது.

Friday, September 7, 2012

பார்த்தது பிடித்தது


பொதுவாக வாகனங்களின் பின்னால், சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே, பத்து அடி இடைவெளி விட்டு வரவும் என்பது போன்ற வார்த்தைகள் இருப்பது சாதாரணம்.
சமீபத்தில் ஒரு வாகனத்தின் பின்னால் எழுதியிருந்த வாசகம் & 100&ல் பயணம் செய்தால்... 108 பின்னால் வரும்! என்பதுதான்.
உயிரோட்டம் கலந்த உண்மை.

உன்னால் முடியும்..!

விட்டத்தை முறைத்துப் பார்த்தால்
விட்டதை அடைய முடியாது
சோம்பலைப் பழித்துவிட்டு
சிற்றெரும்பாய் செயல்பட்டால்
சிகரத்தின் உச்சிகூட
சிறுமலையாய் தோன்றும்.


Friday, August 31, 2012

சுயநலப் பேய்கள்!

ஈழத் தமிழர்
சிங்களர்களிடம் சிக்கிச் சீரழிந்தபோதும்
ஆதாயம் தேடினார்கள்
இறந்தபோதும் பிணங்களைக் காட்டி
ஆதாயம் தேடினார்கள்
இனமே அழிந்த பின்னும்
ஆதாயம் தேடுகிறார்கள்
டெசோ என்ற முகமூடியுடன்!

Thursday, July 26, 2012

வாழு வாழ்ந்து விடு..!



இந்த பூவுலகில் நாம் வந்து பிறந்தது நாம் எடுத்த முடிவு அல்ல. அப்படியிருக்க சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனம் உடைந்துபோவதும், தவறான முடிவெடுத்து தன்னையே மாய்த்துக் கொள்வதும் பைத்தியக்காரத்தனம். ஒருமுறை ரயிலில் பயணிக்கும்போதோ, கோயில்களுக்குச் செல்லும்போதோ அங்கே கண்கள் தெரியாதவர்களும், கால் ஊனமானவர்களும் வியாபாரம் செய்வதைப் பாருங்கள். அவர்கள்கூட வாழ்க்கை நடத்த வழி தேடி, நம்பிக்கையோடு செயல்படுகிறார்கள்.
அப்படி இருக்க, எல்லாவிதத்திலும் சௌகரியமான நம்மால் வாழ முடியாதா என்ன? வாழ நினையுங்கள் கட்டாயம் வழி கிடைக்கும்.