Wednesday, September 17, 2008

பாமரனின் பஞ்சப்பாட்டு



பாமரனின் பஞ்சப்பாட்டு


வெலவாசி எகிறிப்போச்சு வெஷம்போல ஏறிப்போச்சு பெட்ரோலும் டீசலும் கெடைக்கறதில்ல பவர்கட்டும் ஓயவில்ல நெலமெல்லாம் காஞ்சிப்போச்சு வெவசாயிங்க வாழ்க்கையும் மாஞ்ஜிப்போச்சு வண்டி ஓட்டவும் முடியல வாழ்க்கை நடத்தவும் வழியில்ல பரம்பற சொத்து எதுவுமில்ல பேங்குல பேலன்ஸ்கூட இல்ல பதுக்கல்காரன் பதுக்கியத... வீணாப்போன பின்னால பாதி வெலக்கி வித்ததாட்டும்... ஏழபாழ எங்களுக்கு... புழுத்துப்போன அரிசியெல்லாம்... தலைவா! நீ ஒரு ரூபாவுக்குப் போட்டுபுட்டா போதுமா? நாய்கூட சீண்டாத கூப்பன் அரிசி அது எங்க வாழ்கைக்கான அரிசியா? வாய்க்கரிசியா? அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாடலாம் அத்தியாவசிய பொருளுக்காக மக்கள் திண்டாடலாமா? கவர்ச்சித் திட்டங்கள நிறுத்துங்கய்யா கவனத்த மக்கள் நலனுல திருப்புங்கய்யா.


Monday, September 15, 2008



இந்தியாவின் தோல்வி காங்கிரஸின் வெற்றி


உலக அரங்கில் பாரதம் ஜனநாயக நாடாக இன்று தெரிந்தாலும், இங்கு நடப்பது மன்னராட்சிதான். என்ன நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது தனது கைத்தடிகளை பிரதம மந்திரி பதவியில் அமர வைத்து ஆட்சிக்கட்டிலை நடத்தி வருகிறது காங்கிரஸ் கட்சி. நமது தேசம் ஆங்கிலேயர்களிடம் அடிமைபட்டிருந்தபோது சுதந்திர காற்றை சுவாசிக்க செயல்பட்ட இயக்கங்களும் தலைவர்களும் ஏராளம். நாட்டின் விடுதலைக்காக உடமைகளையும்,உயிரையும் இழந்தவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட இயக்கங்களுள் ஒன்று காங்கிரஸ், இன்றுள்ள காங்கிரசுக்கு நேர்மாறானது அன்று காந்தியடிகள் வழிநடத்திய காங்கிரஸ். அன்று தேச மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் விடுதலைக்காகவும் காங்கிரஸ் இயங்கியது. இன்று பதவி மோகத்துக்காகவும், சுயநல நோக்கத்துக்காகவுமே காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதனை குறிப்பாக தற்போதைய மத்திய அரசு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றம்,அத்யாவசிய பொருட்களின் விலை ஏற்றம்,பொருளாதாரத்தில் பணவீக்க விகிதம் அதிகமாகிக்கொண்டு வருவது, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம்,விவசாயிகளின் தொடர் தற்கொலை அவலம், இவ்வளவு சிக்கல்களையும் வைத்துக்கொண்டு, அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட, இந்தியாவின் எதிர்காலத்தையும் சூன்யமாக்கிட துடித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் ஆட்சி. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் எப்படிப்பட்ட விலைவுகளை உண்டுபண்ணும் என்பதை கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மன்மோகன்சிங் அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்தியாவை அமெரிக்காவுக்கு அடமானம் வைக்க, கோடான கோடி மக்களின் வாழ்வை இருட்டடைய செய்ய துடித்துக்கொண்டிருக்கிறார். ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அமெரிக்காவின் விகார முகத்தை நாம் போகப்போகத்தான் பார்க்கப்போகிறோம். பொருளாதார மேதை, பெரிய அறிஞர் என்றெல்லாம் உயர்வாக எண்ணி இந்திய மக்கள் பிரதமராக ஏற்றுக்கொண்ட மன்மோகன்சிங், அவர்களின் உணர்வுகளை காலில்போட்டு நசுக்கிவிட்டார். விலைகொடுத்து எம்.பி.க்களை வாங்கி பதவியை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு காங்கிரஸ் தரம் தாழ்ந்துவிட்டது. நாட்டின் நலனைப்பற்றி கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், தான்தோன்றித்தனமாக செயல்படுபவராகவும், சோனியாவின் சொல்லுக்கு பம்பரமாக சுழலும் தலையாட்டி பொம்மையாகவும் உள்ளார் மன்மோகன்சிங். கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும், நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுவிட்டார் மன்மோகன்சிங். பேரம் பேசப்பட்டு கோடிக்கணக்கான பணத்தினால் எம்.பி.க்களை விலைக்கு வாங்கி மன்மோகன் அரசு வெற்றி பெற்றது கண்டிக்கதக்கது என்ற கம்யூனிஸ்டு மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உலக அரங்கில் இந்தியாவை வெட்க்கித் தலைகுனிய வைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கும் மன்மோகன்சிங்குக்கும் வேண்டுமானால் இது மகத்தான வெற்றியாக இருக்கலாம், ஆனால் இந்தியாவும் இந்திய மக்களும் நல்ல தலைமையை, நாட்டின் நலன் கருதும் உத்தமமான தலைவரை தேர்ந்தெடுப்பதில் மாபெரும் தோல்வியடைந்துவிட்டனர் என்பதே நிதர்சனமான உண்மை.பாகிஸ்தானில் தனது தாக்குதலை அத்துமீறி துவங்கியுள்ள அமெரிக்கப் படை, அணுசக்தி ஒப்பந்தம் என்ற அடிமைசாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டுவிட்டால் பிறகு இந்தியாவிலும் தனது அடாவடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.பொறுப்பற்ற,திறமையற்ற,தைரியமற்ற தலைமையை தவறாக தேர்ந்தெடுப்பவர்கள் சந்திக்க வேண்டிய இன்னல்களைதான் இந்திய மக்களும் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Friday, September 12, 2008



தமிழக மக்கள் ‘‘இ’’னா ‘‘வா’’னாக்கள்


பாவம் தமிழக மக்கள். அவர்கள் படும் கஷ்ட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ‘மேடை ஏறி பேசும்போது ஆறு போல பேச்சு கீழ இறங்கி வந்ததுமே சொன்னதெல்லாம் போச்சுஆசை வார்த்த காட்டு உனக்கும் கூட ஓட்டுசிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பாத்து சிரிப்பு வருது’ என்ற சந்திரபாபுவின் பாடல் வரிகள் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் உள்ள சூழலுக்கு பொருந்தும் அருமையான பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகளில் வரும் சிரிப்பு இதயத்தின் ரணத்தால் வரக்கூடியது. ஆம், இன்றும் அரசியல்வாதிகள் நம் மக்களை ஏய்த்து பிழைப்பதும்,கோடி கோடியாக கொள்ளையடித்து சொகுசுக் காரில் ஊர்சுற்றி உள்ளாச பேர்வழிகளாக வாழ்கிறார்கள்.தேர்தலுக்கு முன் உங்கள் காலுக்கு செருப்பாவேன்,கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் உங்கள் வீட்டு சேவகனாவேன்,நான் தேர்தலில் வெற்றி பெற்றால் உங்கள் வீடுகளில் தேனாறும் பாலாறும் பாயும் என்று வாய் கிழிய வாக்குறுதி வாரி வீசுவார்கள்.ஆனால் தேர்தல் வெற்றிக்கு பின்னால் எந்த திட்டத்தில் எவ்வளவு கமிஷன் கிடைக்கும்.யாரை மிரட்டி எவ்வளவு கொள்ளை அடிக்கலாம்.சட்ட விரோதமாக மடக்கிப்போட எங்கெல்லாம் புறம்போக்கு நிலங்கள் உள்ளன என்ற எண்ணத்தோடே தினமும் விடிந்து மறையும். மக்கள் குறைகள், கஷ்ட நஷ்டங்களுக்கான தீர்வுகளும், உதவிகளும்,அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளும் கானல் நீராகிவிடும். இவ்வளவும் நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.தமிழக மக்கள் ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் அனுபவித்துக் கொண்டு வாய் மூடி மௌனிகளாக, அடிமாடுகளைப்போல் எதிர்த்து போராட திரானியற்றவர்களாக உள்ளனர்.இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை ஆக்குகிறோம், நகரங்களுள் சென்னையை சிங்கார சென்னை ஆக்குகிறோம் என்றவர்கள் ஆதாயம் அதிகம் கிடைக்கும் பாலங்கள் அமைப்பதில் காட்டும் முனைப்பை அன்றாடம் மக்கள் படும் அவதிகளில் காட்டாதது வேதனைக்குரியது.ஒருவேளை பாலங்களால் போக்குவரத்து வேண்டுமானால் சீர்படலாம், மக்கள் பயணிக்க பேருந்து வசதி வேண்டுமே.அவ்வப்போது ஆயிரம்,இரண்டாயிரம் பேருந்துகள் புதிதாக விடுவதாக செய்திகள் வருகின்றன.உண்மையில் செய்திகள் மட்டுமே வருகின்றன. ஆனால் இன்னமும் மக்கள் தினமும் நரக அவஸ்த்தை பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஓட்டை உடைந்த பேருந்துகளில் தொங்கிக்கொண்டுதான் பயணிக்கிறார்கள் உயிரை எமனுக்கு சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டு.அப்படியே நல்ல புதிய பேருந்து வந்தால், அது மக்கள் கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் சம்பாதியத்தை சொற்ப நாளில் ஏப்பம் விடும் அளவுக்கு உயர்ந்த கட்டணம் கொண்டதாக உள்ளது. அவசரத்துக்கு வேறு வழி இல்லாமல் ஏறிவிட்டால், பெயர் மட்டுமே டீலக்ஸ், நுழைவாயில் கதவு அடைக்கப்பட்டுவிடும். இங்கும் அங்குமாக இரண்டு பொந்துகள் மட்டுமே பேருந்தின் கூறையில் உள்ளது, பேருந்து முழுக்க கண்ணாடியால் அடைக்கப்பட்டு, மக்களும் வெற்றிலை கட்டுகளாக, லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் அடிமாடுகளைப்போல் அடைக்கப்பட்டு, மூச்சுக்காற்று முட்டும் நிலையில் பயணிக்க வேண்டி உள்ளது.இதில் இன்னொரு அபத்தம் என்னவென்றால், எம். சர்வீஸ் என்று ஒன்று உள்ளது. வெள்ளை போர்டில் எண்ணுக்கு முன் எம். போடப் பட்டிருக்கும். அப்படி இருந்தால் அந்த பேருந்தில் பயணிக்க சாதாரண பேருந்தைவிட பயணக் கட்டணம் ஒரு ரூபாய் அதிகமாக இருக்கும். அது விரைவுப் பேருந்தும் கிடையாது. அதேசமயம் அனைத்து நிறுத்தங்களிலும் நின்றுதான் செல்லும்.இதைவிட மட்டமாக எந்த அரசும் தமிழக மக்களை ஏமாற்றியிருக்க முடியாது.இன்னொரு மோசடி என்ன தெரியுமா? சாதாரண பஸ்ஸின் கண்ணாடியில் டீலக்ஸ் என்ற ஸ்டிக்கரை மட்டும் ஒட்டிவிட்டு கிண்டியில் இருந்து டி.வி.எஸ் வரை செல்வதற்கு ஏழு ரூபாய் வாங்கப்படுகிறது.சாதாரண பேருந்தில் மூன்று ரூபாய் ஐம்பது பைசாதான் பயணக் கட்டணம். இவ்வளவு மோசடிகளையும் மனதில் சுமந்துகொண்டும், முண்டியடித்துக்கொண்டும்,நெறுக்கிக் கொண்டும் பயணித்து, இறங்கவேண்டிய இடம் வந்ததும் கீழே இறங்கும்போது, மடிப்பு களையாமல் போட்டு வரும் சட்டை பேன்டுகள் பல மடிப்புகளோடு கசங்கி கண்றாவி ஆகிவிடும்.மாநகர பேருந்துகளில் மக்களிடம் பறிக்கப்படும் வருமானம் போதாதென்று விளம்பரப்பலகைகளின் மூலமாக வேறு வருமானம் குவிகிறது.ஆனால்,கணக்கு என்று வந்துவிட்டால் நஷ்டக்கணக்குதான் காட்டப்படும். மாநகர பேருந்தின் நிலை இப்படி என்றால், வெளி ஊர் செல்லும் பேருந்துகளிலும் இதே நிலைதான். அதிலும் குறிப்பாக வாரக் கடைசி நாட்களான வெள்ளி, சனிக் கிழமைகளில் ஊருக்கு போகலாம்,சொந்தபந்தங்களை பார்க்கலாம் என்று நினைத்தால்,பேருந்துகள் நிறம்பி வழிந்து மக்கள் இங்கும் அங்குமாக பஸ் கிடைக்காமல் அலைவது,பேருந்து நிலையத்திலேயே படுத்துக் கிடப்பது எல்லாம் கொடுமையிலும் கொடுமை.போதாக்குறைக்கு மின்சார தட்டுப்பாடும், டீசல் தட்டுப்பாடும், அதனால் அனைத்துப் பொருட்களின் விலை விஷம் போல் உயர்ந்து மக்களின் வாழ்வே கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் நம் காலுக்கு செருப்பாகிறேன், உங்கள் வீட்டு சேவகனாக இருப்பேன்,பாலாறும் தேனாறும் ஓடவிடுவேன் என்று வார்த்தைகளை வாரிவிட்ட அரசியல்வாதிகளோ இதைபற்றியெல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல், மனிதாபிமான அடிப்படையில் கூட மக்களின் கஷ்டங்களை பொருட்படுத்தாமல், கொட்டுகின்ற லஞ்சப் பணத்தில் ஏகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். தினுசு தினுசான கார்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ஸ்டார் ஹோட்டல்களில் கும்மாளம் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆடம்பர விழாக்களும், விளையாட்டு போட்டிகளும், டாம்பீக வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.மக்களின் வரிப் பணத்தில் வாரிசுகளை பெருமைபடுத்த விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நாமும் செம்மறி ஆட்டுக் கூட்டம்போல் தலையை ஆட்டிக்கொண்டு தொடர்ந்து தவறாமல் வாக்குரிமையை நிலைநாட்டி வாழ்வுரிமைகளை இழந்துகொண்டுதான் இருக்கிறோம்.உண்மையில் தமிழகத்தில் வாழ்பவர்கள் மக்களா? அல்லது மாக்களா? பாவம் ‘‘இ’’னா ‘‘வா’’னாக்கள்.

பான்பராக் பைத்தியங்கள்


பான்பராக் பைத்தியங்கள்


வயதானவர்கள் அசைபோட்டுக் கொண்டே இருப்பதை நாம் நமது வீடுகளிலும் வெளிவட்டாரங்களிலும் கட்டாயம் பார்த்திருப்போம். வெற்றிலை பாக்கு போடுவதென்பது டீ,காபி குடிப்பது போன்ற பழக்கங்களில் ஒன்றாக நமது முன்னோர்களிடம் அன்றைய நாட்களில் இருந்த ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.வெற்றிலை பாக்கை சிலர் மெல்ல முடியாவிட்டால், அதற்காக சிறிய இரும்பால் ஆன உரலையும் அதற்கு தக்க உலக்கையையும் வைத்து இடித்து, தூளாக்கி வாயில் போட்டு மென்றுகொண்டு வீட்டு திண்ணைகளில் அமர்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அவர்கள் கூட இன்றைய இளைஞர்களைபோல அசைபோட்டிருக்க முடியாது. இவர்களைப்போல சுற்றுப்புறங்களை நாசமாக்கி இருக்கவும் முடியாது. வயதானவர்களில் சிலர் வெற்றிலை பாக்கை மென்று அந்த எச்சிலை துப்ப ஒரு பழைய டப்பாவில் மணலைகொட்டி, அதில் எச்சிலை உமிழ்ந்து ஒரு ஓரமாக கொட்டிவிடுவார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களிடம் தொற்று நோய்போல் பரவும் சிகரெட் பிடிப்பது,மது அருந்துவது,பீடா என்ற வரிசையில் பிரசித்தமானது, போதை மற்றும் வாய் புற்றுநோயையே உருவாக்ககூடிய மோசமான பான்பராக் பழக்கம்.ஒரு நாளைக்கு பத்துக்கும் மேலான பாக்கெட்டுகளை சர்வசாதாரணமாக மென்று துப்பும் மிஷின்களாக நிறைய இளைஞர்கள் உள்ளனர். பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் இந்த பழக்கத்துக்கு அடிமை ஆகும் இளைஞர்கள் அதன் விபரீதத்தை அறியாமல் சரம் சரமாக மென்று தள்ளுகிறார்கள்.பணத்தை செலவழித்து அவர்களின் உடல் நிலையையும் நாசமாக்கிக்கொண்டு சுற்றுப்புறத்தையும் சீரழித்துவிடுகிறார்கள். ரயில் நிலையங்களின் தரைகளையும்,சுரங்க நடைபாதை சுவர்களையும், படிக்கட்டுகளையும்,பேருந்துகளையும் நாரடித்துவிடுகிறார்கள். ஏன்! சில சமயங்களில் ஆட்கள்மீதே துப்பி சிக்கலுக்கு உள்ளாவதும் உண்டு. சமீபத்தில் நங்கநல்லூரில் இருந்து உயர் நீதிமன்றம் வரை செல்லும் ஑52பி ஒ மாநகரப்பேருந்தில் நான் அமர்ந்திருந்த சீட்டுக்கு முன் சீட்டில் அமர்ந்து பயணம் செய்த ஒரு டிப்டாப் வாலிபர் வாயை அசைபோட்டுக்கொண்டே வந்தார். பேருந்து கிண்டி வருவதற்குள்ளாக பல முறை எச்சிலை ஜன்னல் பக்கமாக துப்பிக்கொண்டே வந்தார். அதிலும் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போது துப்பினால் காற்றில் பறந்து பக்கத்து சீட்டில் உள்ளவர்கள் மீது படுமே என்ற சாதாரண விஷயத்தை கூட பொருட்படுத்தாமல் துப்பிக்கொண்டே வந்தார். நான் சொல்லிப்பார்த்தேன் அவர் கேட்பதாக தெரியவில்லை. பேருந்து சைத்தாப்பேட்டை வந்தபோது மீண்டும் தலையை நீட்டி எச்சிலை துப்பினார். பாவம் பேருந்தின் பக்கத்தில் டூ&வீலரில் வந்த ஒருவரின் அழகான வெள்ளை வெளேர் சட்டையை நாசமாக்கிவிட்டார். டூவீலரில் வந்தவர் எக்கச்சக்கமான கோபத்தில் வாயில் வந்தபடி அவரை திட்டியதோடு, டூவீலரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு ஜன்னல் வழியாகவே எம்பி எச்சில் துப்பிய வாலிபரை கண்ணத்தில் இரண்டு அடியும் கொடுத்தார். வாலிபர் மன்னிப்புக் கேட்டும் டூ&வீலர்காரரின் கோபத்தில் இருந்து தப்ப முடியவில்லை.பேருந்தில் அதுவரை வேடிக்கை பார்த்தவர்களின் வசைமழைக்கும் தப்ப முடியவில்லை. பெரியவர்கள் சொல்லுவார்கள், ''ஒன்று சொல்புத்தி வேண்டும் அல்லது சுயபுத்தி வேண்டும்'' என்று. சொல்லியும் கேட்கவில்லை, சுயமாகவும் யோசிக்கவில்லை அந்த பான்பராக் இளைஞர் அதன் விலைவுதான் கண்ணத்தில் விழுந்த அடி.பான்பராக் பைத்தியம் படுத்தும்பாடு அசௌகரியத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதோடு, சுற்றுப்புறத்தை நாசமாக்கும் நாசகார சக்தியாகவும் உள்ளது.இந்த பொழுதுபோக்காக ஆரம்பித்த பழக்கம் முடிவில் நம்மையே அழித்துவிடும். விபரீதம் உணர்ந்து பான்பராக்கை மறந்து, பண்போடு இன்புற்று வாழ்வோம் இளைஞர்களே.