Friday, September 12, 2008



தமிழக மக்கள் ‘‘இ’’னா ‘‘வா’’னாக்கள்


பாவம் தமிழக மக்கள். அவர்கள் படும் கஷ்ட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ‘மேடை ஏறி பேசும்போது ஆறு போல பேச்சு கீழ இறங்கி வந்ததுமே சொன்னதெல்லாம் போச்சுஆசை வார்த்த காட்டு உனக்கும் கூட ஓட்டுசிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பாத்து சிரிப்பு வருது’ என்ற சந்திரபாபுவின் பாடல் வரிகள் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் உள்ள சூழலுக்கு பொருந்தும் அருமையான பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகளில் வரும் சிரிப்பு இதயத்தின் ரணத்தால் வரக்கூடியது. ஆம், இன்றும் அரசியல்வாதிகள் நம் மக்களை ஏய்த்து பிழைப்பதும்,கோடி கோடியாக கொள்ளையடித்து சொகுசுக் காரில் ஊர்சுற்றி உள்ளாச பேர்வழிகளாக வாழ்கிறார்கள்.தேர்தலுக்கு முன் உங்கள் காலுக்கு செருப்பாவேன்,கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் உங்கள் வீட்டு சேவகனாவேன்,நான் தேர்தலில் வெற்றி பெற்றால் உங்கள் வீடுகளில் தேனாறும் பாலாறும் பாயும் என்று வாய் கிழிய வாக்குறுதி வாரி வீசுவார்கள்.ஆனால் தேர்தல் வெற்றிக்கு பின்னால் எந்த திட்டத்தில் எவ்வளவு கமிஷன் கிடைக்கும்.யாரை மிரட்டி எவ்வளவு கொள்ளை அடிக்கலாம்.சட்ட விரோதமாக மடக்கிப்போட எங்கெல்லாம் புறம்போக்கு நிலங்கள் உள்ளன என்ற எண்ணத்தோடே தினமும் விடிந்து மறையும். மக்கள் குறைகள், கஷ்ட நஷ்டங்களுக்கான தீர்வுகளும், உதவிகளும்,அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளும் கானல் நீராகிவிடும். இவ்வளவும் நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.தமிழக மக்கள் ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் அனுபவித்துக் கொண்டு வாய் மூடி மௌனிகளாக, அடிமாடுகளைப்போல் எதிர்த்து போராட திரானியற்றவர்களாக உள்ளனர்.இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை ஆக்குகிறோம், நகரங்களுள் சென்னையை சிங்கார சென்னை ஆக்குகிறோம் என்றவர்கள் ஆதாயம் அதிகம் கிடைக்கும் பாலங்கள் அமைப்பதில் காட்டும் முனைப்பை அன்றாடம் மக்கள் படும் அவதிகளில் காட்டாதது வேதனைக்குரியது.ஒருவேளை பாலங்களால் போக்குவரத்து வேண்டுமானால் சீர்படலாம், மக்கள் பயணிக்க பேருந்து வசதி வேண்டுமே.அவ்வப்போது ஆயிரம்,இரண்டாயிரம் பேருந்துகள் புதிதாக விடுவதாக செய்திகள் வருகின்றன.உண்மையில் செய்திகள் மட்டுமே வருகின்றன. ஆனால் இன்னமும் மக்கள் தினமும் நரக அவஸ்த்தை பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஓட்டை உடைந்த பேருந்துகளில் தொங்கிக்கொண்டுதான் பயணிக்கிறார்கள் உயிரை எமனுக்கு சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டு.அப்படியே நல்ல புதிய பேருந்து வந்தால், அது மக்கள் கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் சம்பாதியத்தை சொற்ப நாளில் ஏப்பம் விடும் அளவுக்கு உயர்ந்த கட்டணம் கொண்டதாக உள்ளது. அவசரத்துக்கு வேறு வழி இல்லாமல் ஏறிவிட்டால், பெயர் மட்டுமே டீலக்ஸ், நுழைவாயில் கதவு அடைக்கப்பட்டுவிடும். இங்கும் அங்குமாக இரண்டு பொந்துகள் மட்டுமே பேருந்தின் கூறையில் உள்ளது, பேருந்து முழுக்க கண்ணாடியால் அடைக்கப்பட்டு, மக்களும் வெற்றிலை கட்டுகளாக, லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் அடிமாடுகளைப்போல் அடைக்கப்பட்டு, மூச்சுக்காற்று முட்டும் நிலையில் பயணிக்க வேண்டி உள்ளது.இதில் இன்னொரு அபத்தம் என்னவென்றால், எம். சர்வீஸ் என்று ஒன்று உள்ளது. வெள்ளை போர்டில் எண்ணுக்கு முன் எம். போடப் பட்டிருக்கும். அப்படி இருந்தால் அந்த பேருந்தில் பயணிக்க சாதாரண பேருந்தைவிட பயணக் கட்டணம் ஒரு ரூபாய் அதிகமாக இருக்கும். அது விரைவுப் பேருந்தும் கிடையாது. அதேசமயம் அனைத்து நிறுத்தங்களிலும் நின்றுதான் செல்லும்.இதைவிட மட்டமாக எந்த அரசும் தமிழக மக்களை ஏமாற்றியிருக்க முடியாது.இன்னொரு மோசடி என்ன தெரியுமா? சாதாரண பஸ்ஸின் கண்ணாடியில் டீலக்ஸ் என்ற ஸ்டிக்கரை மட்டும் ஒட்டிவிட்டு கிண்டியில் இருந்து டி.வி.எஸ் வரை செல்வதற்கு ஏழு ரூபாய் வாங்கப்படுகிறது.சாதாரண பேருந்தில் மூன்று ரூபாய் ஐம்பது பைசாதான் பயணக் கட்டணம். இவ்வளவு மோசடிகளையும் மனதில் சுமந்துகொண்டும், முண்டியடித்துக்கொண்டும்,நெறுக்கிக் கொண்டும் பயணித்து, இறங்கவேண்டிய இடம் வந்ததும் கீழே இறங்கும்போது, மடிப்பு களையாமல் போட்டு வரும் சட்டை பேன்டுகள் பல மடிப்புகளோடு கசங்கி கண்றாவி ஆகிவிடும்.மாநகர பேருந்துகளில் மக்களிடம் பறிக்கப்படும் வருமானம் போதாதென்று விளம்பரப்பலகைகளின் மூலமாக வேறு வருமானம் குவிகிறது.ஆனால்,கணக்கு என்று வந்துவிட்டால் நஷ்டக்கணக்குதான் காட்டப்படும். மாநகர பேருந்தின் நிலை இப்படி என்றால், வெளி ஊர் செல்லும் பேருந்துகளிலும் இதே நிலைதான். அதிலும் குறிப்பாக வாரக் கடைசி நாட்களான வெள்ளி, சனிக் கிழமைகளில் ஊருக்கு போகலாம்,சொந்தபந்தங்களை பார்க்கலாம் என்று நினைத்தால்,பேருந்துகள் நிறம்பி வழிந்து மக்கள் இங்கும் அங்குமாக பஸ் கிடைக்காமல் அலைவது,பேருந்து நிலையத்திலேயே படுத்துக் கிடப்பது எல்லாம் கொடுமையிலும் கொடுமை.போதாக்குறைக்கு மின்சார தட்டுப்பாடும், டீசல் தட்டுப்பாடும், அதனால் அனைத்துப் பொருட்களின் விலை விஷம் போல் உயர்ந்து மக்களின் வாழ்வே கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் நம் காலுக்கு செருப்பாகிறேன், உங்கள் வீட்டு சேவகனாக இருப்பேன்,பாலாறும் தேனாறும் ஓடவிடுவேன் என்று வார்த்தைகளை வாரிவிட்ட அரசியல்வாதிகளோ இதைபற்றியெல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல், மனிதாபிமான அடிப்படையில் கூட மக்களின் கஷ்டங்களை பொருட்படுத்தாமல், கொட்டுகின்ற லஞ்சப் பணத்தில் ஏகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். தினுசு தினுசான கார்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ஸ்டார் ஹோட்டல்களில் கும்மாளம் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆடம்பர விழாக்களும், விளையாட்டு போட்டிகளும், டாம்பீக வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.மக்களின் வரிப் பணத்தில் வாரிசுகளை பெருமைபடுத்த விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நாமும் செம்மறி ஆட்டுக் கூட்டம்போல் தலையை ஆட்டிக்கொண்டு தொடர்ந்து தவறாமல் வாக்குரிமையை நிலைநாட்டி வாழ்வுரிமைகளை இழந்துகொண்டுதான் இருக்கிறோம்.உண்மையில் தமிழகத்தில் வாழ்பவர்கள் மக்களா? அல்லது மாக்களா? பாவம் ‘‘இ’’னா ‘‘வா’’னாக்கள்.

No comments:

Post a Comment