Friday, December 28, 2018

புதிய ATM கார்டுகளை எப்படி நடைமுறைக்கு ( ACTIVATE ) கொண்டு வருவது

இப்போது அனைத்து வங்கிகளும் சிப் பொருத்தப்பட்ட ATM கார்டுகளை வழங்கி வருகின்றன புதிய ATM கார்டுகளை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது எனப்பார்ப்போம்
1.முதலில் ATM இயந்திரத்தில் உங்கள் புதிய ATM கார்டை எப்போதும் போல insert செய்யவும்.
**. PINGENERATE  என வரும் அதை தெறிவு செய்க
  
2.ACCOUNT NUMBER கேட்கும் அதை பதிவு செய்க

3. PHONE NUMBER கேட்கும்(ஏற்கனவே நீங்கள் வங்கிக்கணக்கில் பதிவு செய்த PHONE NUMBER) அதை பதிவு செய்யவும் CONFIRM கொடுக்கவும்.
  
4. உங்கள் போனுக்கு ஒருOTP NUMBER நான்கு இலக்கத்தில் எ ண்களாக இல்லாமல் எழுத்துகளாக வரும் அதை எழுதி வைத்துக் கொள்ளவும்

5. மீன்டும் ATM CARD ஐ மெஷினில் insert செய்க வழக்கம் போல் ENGLISH அல்லது தமிழ் மொழி தேர்வு பிறகு ஏதேனும் இரண்டு இலக்க எண் பதிவு செய்த பின்PIN CHANGE ெதறிவு செய்த பின் உங்களுக்கு வந்த 4 digit OTP எண்ணை ஒரு முறை மட்டும் பதிவு செய்க.

6. மீண்டும்PIN NUMBER கேட்கும் அப்போது நீங்கள் உங்களுக்கு தேவையான நீங்கள் மட்டும் ரகசியமாக வைத்திருக்கக் கூடியPIN NUMBER ஐ பதிவு செய்க.
  
7.RE ENTER PIN NUMBER கேட்டும் மீண்டும் பதிவு செய்க.
8. இப்போது உங்கள் புதிய ATM CARD உபயோகத்திற்கு READY.
குறிப்பு: உங்கள் புதிய கார்டை ATM ல் insert செய்தவுடன் அதன் full process முடியாத போதும் பழைய கார்டு செயலிழந்து விடும். அதன் பிறகு புதிய கார்டை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும்.
மறக்காமல் A/C NUMBER மற்றும் பதிவு செய்த MOBILEPHONE ஐ உடன் கொண்டு செல்லவும்

Thursday, November 16, 2017நித்தமும் நிகழ்கிறது விடியலைத் தேடி ஓட்டம்
வெகு தூரம் ஓடியதாய் தோன்றினாலும்
தொடங்கிய இடத்திலேயே இருக்கிறேன் என்ற உண்மை
தீயாய் சுட்டெரிக்கிறது!
-மு.நா.

Wednesday, May 22, 2013

முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு...

மிகுந்த கஷ்டப்பட்டு மெகா முயற்சிகளால் +2&வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்று, தான் லட்சியமாகக் கொண்டிருந்த துறையைத் தேர்ந்தெடுத்த மாணவர்களானாலும் சரி, மிகுந்த பிரயத்தனப்பட்டும் ஓரளவு சுமாரான மதிப்பெண்களைப் பெற்று கல்லூரிகளில் சீட்டு வாங்கியிருந்தாலும்... வாங்கினாலும் சரி, யாராக இருந்தாலும் தயவுசெய்து இங்கு நான் சொல்வதை கவனமாக படித்து மனதில் நிறுத்துங்கள். நீங்கள் சேரும் கல்லூரியில் என்னென்ன கட்டுதிட்டங்கள் உள்ளன என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். காரணம், சில கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளின் விதிமுறைகளை (தெரிந்தோ, தெரியாமலோ) மீறினால்கூட, தயவுதாட்சன்யமே இல்லாமல் சீட்டைக் கிழித்து அனுப்பவும் தயங்குவதில்லை. பெற்றோர்கள் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக படாத கஷ்டமெல்லாம் பட்டு, கடனை வாங்கி யார் யார் காலிலோ விழுந்து உங்களை கல்லூரிகளில் சேர்க்கிறார்கள். ஆனால், நீங்கள் கூட்டணி சேர்த்துக்கொண்டு இளமை வேகத்தில் எல்லாவற்றையும் மறந்து கட்டுக்கடங்காமல் நடந்து, சீட்டை கிழிக்கும்போது தலை கவிழ்ந்து நிற்பீர்கள். சில ஆண்டுகள் கஷ்டப்பட்டால், பல ஆண்டுகள்   வளமான வாழ்வு கிட்டும். எதற்கு இந்த அவமானம், ஏன் இந்தக் கொடுமையான சூழலில் நாம் சிக்க வேண்டும் என்று நினைத்து, நம் பெற்றோர்கள் பட்ட கஷ்டத்தை மனதில் வைத்து, கல்லூரி கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து கரைசேரப் பாருங்கள். உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்!

Monday, April 8, 2013

ஆளுக்கொரு நீதியா?


1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு யாராலும் மறக்கமுடியாதது.  மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 257 பேர் கொடுராமாக பலியானார்கள். 713 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் தாதா தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், அவனது தம்பி அயூப் மேமன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உட்பட 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் ஒருவரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரில் 2 பேரும் இறந்தனர். பாகிஸ்தானில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆயுதங்களில், ‘ஏ.கே., 56’ மற்றும் ஒரு பிஸ்டலை நடிகர் சஞ்சய் தத் வைத்திருந்த குற்றத்திற்காக, தொடர் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த, ‘தடா’ சிறப்பு கோர்ட், 2007-ல் அவருக்கு, ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இந்தத் தொடர் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில், தண்டனை பெற்றவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்த, மேல் முறையீட்டு மனுக்களின் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் பி.எஸ். சவ்கான் ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் யாகூப் மேமனைத் தவிர மற்றவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தனர். சஞ்சய் தத் சட்டவிரோதமாக 9 எம்எம் பிஸ்டல் மற்றும் ஒரு ஏ.கே.-56 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும், மேலும் பல கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அவர் மீது கூறப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அந்த தண்டனைக் காலம், ஆறு ஆண்டிலிருந்து, ஐந்தாண்டாக குறைக்கப்பட்டுள்ளது. சஞ்சய் 18 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்துள்ளது. அவர் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்ததால் தற்போது 3 ஆண்டுகள் 5 மாதம் மீண்டும் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், சஞ்சய் தத்துக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள சரியான தீர்ப்பு இது. ஆனால், சில கேடுகெட்ட அரசியல்வாதிகள், துர்புத்தி கொண்டவர்கள் மூக்கை நுழைப்பது கேவலம்.
நடிகர் சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு வழங்கலாம் என, பாலிவுட் நட்சத்திரங்களும், சில அரசியல் கட்சி பிரபலங்களும், பிரஸ் கவுன்சில் தலைவர், மார்க்கண்டேய கட்ஜுவும் கச்சை கட்டி நிற்பதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. ஆனால், சஞ்சய் தத்தோ, ‘நான் மன்னிப்பு கோரப் போவது இல்லை’ என, தெரிவித்திருக்கிறார். அவர் செய்த தேச துரோகத்துக்கு மன்னிப்பு கேட்கவே அவருக்கு அருகதை கிடையாது என்பதுதான் உண்மை. 
பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் கருணை காட்டச் சொல்லும் மகாபுருஷர்களை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவனை, நடத்த காரணமானவனை தூக்கில் போட வேண்டாம் என்பார்கள்; கடல் வழியாக மும்பையில் நுழைந்து பொதுமக்களை சுட்டுக் கொன்றவனை தண்டித்தால் எதிர்ப்பார்கள். அரசியல் பலம், பண பலம், சினிமா புகழ் இருந்துவிட்டால் சொல்லவே வேண்டாம் அவன் எவ்வளவு பெரிய தேசதுரோகியாக இருந்தாலும், தேசதுரோகத்தில் ஈடுபட்டாலும் அதை மறந்து துதி பாட காத்துக் கிடக்கும் ஒரு கூட்டத்தை இங்குதான் பார்க்க முடியும். 
நடிகர் சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்கக் கோரி, தனி நபர்களும், சில அமைப்புகளும், மகாராஷ்டிரா கவர்னர் சங்கர நாராயணனிடம் மனு கொடுத்துள்ளனர். அதே போல், மன்னிப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சில தனி நபர்களும், அமைப்புகளும் மனு அளித்துள்ளன.
இந்த வகையில், மகாராஷ்டிரா கவர்னருக்கு, 60 மனுக்கள் வந்துள்ளன. இதில், 25 மனுக்கள், சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன. இவ்வாறு மனுக்கள் அளித்தவர்களில், பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜ், சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அமர்சிங், நடிகையும், எம்.பி.-யுமான ஜெயப்பிரதா, ஆகியோரும் உள்ளனர்.
வயிற்றுப் பசிக்கு, இல்லாத கொடுமைக்கு திருடுபவனும் சூழ்நிலைக் காரணமாக குற்றவாளிகளாக ஆக்கப்பட்டவர்களுக்கும் சட்டம் எந்த பாரபட்சமும் காட்டுவதில்லை.  பெரிய பெரிய தேச துரோகிகள் சிலரால் தியாகிகளாகக் கூட கற்பிக்கப்படுகிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கையில், ‘என்ன தேசமோ இது என்ன தேசமோ... இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ, நீதி வெல்லுமோ... நேரமாகுமோ’ என்ற பாடல்தான்  நினைவுக்கு வருகிறது. ஆனால் ஏப்ரல் 18-ல் சஞ்சய் சரணடையவுள்ளதாக சொல்லியிருப்பது கூடுதல் செய்தி. 

Monday, February 25, 2013

உள்ளதை சொல்வதில் என்ன தவறு?


விஸ்வரூபம் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டபோது இயக்குநர் பாரதிராஜா பேசியது.
‘கண்ணகி கோபப்பட்டாள், அன்று மதுரை எரிந்தது. இன்று ஒரு கலைஞனை வேதனைப்பட வைத்துவிட்டார்கள். அதனால் தமிழகமே எரிந்து போய் விடுமோ என்று அஞ்சுகிறேன். நாட்டின் கலாசாரம், நாகரீகம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவது, எழுத்தாளனும், கலைஞனும், படைப்பாளியும்தான். அனைவருக்கும் பாலமாக இருந்து பெருமை தேடித் தருகிறவர்கள் இவர்கள் மூவரும்தான்.
கலைஞன் அழிந்தால் கலை அழியும், கலை அழிந்தால் மொழி அழியும், மொழி அழிந்தால் இனமே அழியும், இனம் அழிந்தால் பிணம் திண்ணும் கழுகுகள்தான் பறக்கும். அப்படி ஒரு நிலை தமிழகத்துக்கு வரக் கூடாது. கலைக்காக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த ஒரு கலைஞனை கீறி ரணம் பார்த்து ரத்த ருசி பார்ப்பது, தமிழகத்தின் சாபக்கேடாக முடிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
கமல் என்ன தவறு செய்து விட்டான்? நடப்பு நிகழ்ச்சியைச் சொன்னான். அது தவறா? பின்லேடனையும், முல்லா ஓமரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது தவறா? கஜினி முகம்மது கொள்ளையடித்தான் என்று பேசினால் அது தவறா? அப்படியென்றால் அதைப் பாடப் புத்தகத்திலிருந்தே எடுத்து விடுங்கள்.’

Friday, January 25, 2013

முடிந்தது புத்தகத் திருவிழா


தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம், அண்ணா சாலை காயிதேமில்லத் கல்லூரியில் சிறிய எண்ணிக்கையில் அரங்குகளை அமைத்து, கண்காட்சியைத் தொடங்கி நடத்தியது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அரங்குகளின் எண்ணிக்கை கூடியதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் கடந்த ஆண்டு வரை (2012) கண்காட்சியை நடத்தியது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நடக்கும் வேலைகளினால், இந்த ஆண்டு எங்கே நடத்துவது என சிக்கலில் இருந்தது. ஒருவழியாக முடிவு செய்து, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் சுமார் 750 அரங்குகள் அமைக்கப்பட்டு,  அங்கு 36 வது புத்தகக் கண்காட்சி 11.1.2013 மாலை தொடங்கி 23.1.2013 வரை கோலாகலமாக நடந்து முடிந்தது.
அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, சிவபதி, மேயர் துரைசாமி ஆகியோர் புத்தக காட்சியை தொடங்கி வைத்தனர். முதல்நாள் துவக்க விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 7 எழுத்தாளர்களுக்கு பபாசி விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த புத்தக காட்சியில் சுமார் 60 லட்சத்துக்கும் மேலான புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளன. சுமார் 12 கோடி ரூபாய் அளவில் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. வாசகர்களின் வருகை 10 லட்சத்துக்கும் மேல் இருந்துள்ளது. எப்போதும் போல் வெளி ஊர்களில் இருந்தெல்லாம் ஏகப்பட்ட படிப்பாளர்களும், படைப்பாளர்களும், இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும், அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும், விஜயம் செய்தனர். ஆனால், சில நாட்கள் சில அரங்குகளில் டல்லடித்த சம்பவமும் நடந்தது. எப்படியோ ஒருவழியாக புத்தகத் திருவிழா நல்லபடியாக முடிந்துவிட்டது. ஒரு சில அசௌகரியங்கள் இந்தப் புது இடத்தில் இருந்தது. அந்த அசௌகரியங்களும் களையப்பட்டிருந்தால் இன்னும் கோலாகலமாக இருந்திருக்கும் இந்த 36வது புத்தகக் காட்சி. இதன் மூலம் ஒன்று மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது. லேப்டாப், செல்போன்களெல்லாம்  படிப்பதற்கான சகல வசதிகளைக் கொடுத்தபோதும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் மக்களின் எண்ணம் குறையவில்லை. இது குறையாத வரை புத்தக பதிப்பாளர்களின் காட்டில் மழைதான்.

Wednesday, January 23, 2013

தேசத் துரோகம்!(தினமணி தலையங்கம் - 22.01.2013 )

எதிர்க்கட்சியை ஆளும் கட்சியும் ஆளும்கட்சியை எதிர்க்கட்சியும் குறைகூறுவது வழக்கமான ஒன்று. ஆனால், அத்தகைய குறைகாணும் வழக்கம் வரம்பு மீறுவதும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் தரம் தாழ்வதும் ஏற்புடையதல்ல.

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிந்தனை முகாமில் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, ""பாரதிய ஜனதா கட்சியும், அதன் தாய் நிறுவனமாகிய ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பும் அவற்றின் பயிற்சி முகாம்களில் ஹிந்துத்  தீவிரவாதிகளை உருவாக்கி வருகின்றன. இந்த இரு அமைப்புகளின்  தீவிரவாத நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது'' என்று கூறியிருக்கிறார்.
 அதுமட்டுமல்ல, "சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சில குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது' என்றும் அவர் கூறியிருக்கிறார். அதாவது, பாகிஸ்தான் சென்றுகொண்டிருந்த சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில், ஹைதராபாதில் மெக்கா மஸ்ஜித் மற்றும் மாலேகான் நகரில் மசூதி ஆகியவற்றில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்றும், அவர்கள் செய்த "இந்தக் குற்றத்துக்கு சிறுபான்மையினர் மீது பழி போடுகிறார்கள்' என்றும் கூறியிருக்கிறார். நாட்டின் உள்துறை அமைச்சர் கூறும் இந்தக் குற்றச்சாட்டு உண்மையென்றால், இந்நேரம் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வளவு மோசமான தீவிரவாதம் இந்த தேசத்தில் வளர்க்கப்படுகிறது என்றால் செயல்பட வேண்டிய மத்திய அரசு, ஏன் வெறுமனே சிந்தனை முகாமில் இதைப் பேசிக்கொண்டிருக்க வேண்டும்? மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் துறவி கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தீர்ப்பு வெளியாகாத நிலையில் இதுபற்றி நாம் யாராவது எழுதினாலோ, பேசினாலோகூட நீதிமன்ற அவமரியாதை எனும்போது, ஒரு உள்துறை அமைச்சர், சாதாரண அரசியல் மேடைப் பேச்சாளர்போல, தொண்டர்களின் கரவொலிக்காக இவ்வாறெல்லாம் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கே களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்தியாவில் நிலவிய பதற்றமான நிலை ஒவ்வொரு இந்தியன் மனதிலும் அச்சத்தை விதைத்துக்கொண்டிருந்தது. இந்தியா- பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்டன. சண்டைநிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு இந்திய எல்லையில் துப்பாக்கிக் குண்டுமாரி பொழிந்தது. இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் நுழைகிறார்கள், நடமாட்டம் இருக்கிறது என்று இந்தியா சொன்னதை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துக்கொண்டிருந்தது. இன்னொரு கார்கில் போர் மூளுமோ என்ற அச்சம் நிலவியது. அந்த நிலைமை சற்று தணிந்திருக்கும் இவ்வேளையில், இந்தியாவில் ஹிந்துத் தீவிரவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது என்றும், குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் ஹிந்துத் தீவிரவாதிகள்தான் என்றும் ஒரு உள்துறை அமைச்சரே பேசினால், பாகிஸ்தானுக்கு எத்தகைய கொண்டாட்டமான விஷயம் அது. பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இந்தியாவுக்கு எதிராகத் தீவிரவாதிகளை அனுப்புகின்றது என்றுதான் இந்திய அரசு கூறி வருகிறதே தவிர, முஸ்லிம் தீவிரவாதிகளை அனுப்புகின்றது என்று தவறிக்கூடக் கூறியதில்லை. இந்தியப் பத்திரிகைகளும்கூட தீவிரவாதிகள் கைது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்றுதான் எழுதுகின்றனவே தவிர, அவர்களது பெயரைக்கொண்டு, அவர்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்று எழுதுவது இல்லை. தீவிரவாதிகள் மனிதகுலத்துக்குப் பேரழிவு நாடுபவர்கள் என்பதால்தான் அவர்களை நாம் எதனோடும் அடையாளப்படுத்துவதில்லை. தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை இனம், மதம், மொழி, நாடு கடந்து வெறும் தீவிரவாதிகளாக மட்டுமே பார்ப்பதுதான் வழக்கம். நாட்டின் உள்துறை அமைச்சரான ஷிண்டே இவ்வாறு பேசியிருப்பது மிகப்பெரும் தவறு. பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஹிந்துத் தீவிரவாதிகளை உருவாக்கும் அமைப்புகள் என்றால், தக்க ஆதாரங்களைக் காட்டி, அதனை முறைப்படி நிரூபித்து, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுப்பதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கின்ற பேச்சாக மட்டுமே இருக்குமானால், ஷிண்டே இனியும் உள்துறை அமைச்சர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர். அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி என். வேலு, உயர் நீதிமன்றத்தால் பணியிடை நீக்கம் செய்யப்படக் காரணம், நீதியில் அரசியல் கூடாது என்பதற்காக! மனத்தீ வளர்க்கும் வார்த்தைகளைப் பேசிய ஆந்திர மாநில எம்எல்ஏ அக்பரூதீன் ஓவைஸியை, ஹைதராபாத் போலீஸ் கைது செய்யக் காரணம், மானுடநெறியில் அரசியல் கலக்கக்கூடாது என்பதற்காக! இந்தியாவின் உள்துறை அமைச்சரே ஹிந்துத் தீவிரவாதிகள் பற்றி கூறிவிட்ட பிறகு இனிமேல் நாம் பாகிஸ்தானின் துணையோடு இங்கே நடைபெறும் தீவிரவாதச் செயல்கள் பற்றிப் பேச முடியுமா? உங்கள் உள்துறை அமைச்சரே கூறுகிறார் ஹிந்துத் தீவிரவாதிகள் முகாம்களில் தயாரானதாக என்று பாகிஸ்தான் பதிலடி கொடுக்காதா? இவரெல்லாம் இந்தியாவின் உள்துறை அமைச்சர்...! இவர்களுக்கெல்லாம் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தலைவர்கள்..! ஓட்டுக்காக நாட்டை பலி கொடுப்பவர்களை என்னவென்று அழைப்பது?

அற்புதமான தலையங்கம்!

Tuesday, January 15, 2013

தேசப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்!

வீரத் துறவி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் இந்த ஆண்டில், எல்லையைக் கடந்து சீண்டிப் பார்த்திருக்கிறது பாகிஸ்தான். அன்னிய மண்ணில் பாதம் பதித்து நம் தேசத்தின் பெருமைகளை ஆணித்தரமாக எடுத்துவைத்த விவேகானந்தர் பிறந்த பூமியில் அன்னியர் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளது வேதனைக்குரியது.
கடந்த 8.1.2013-ல் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதோடு இரண்டு இந்திய வீரர்களை கொன்று, ஒரு வீரரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் வெறிச் செயலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்பட வேண்டும். இந்த மிருகத்தனமான செயலுக்கு தகுந்த பாடத்தை மத்திய அரசு புகட்டவேண்டும் என்பதே மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பு. இந்தச் சூழ்நிலையில் நியூயார்க் சென்றிருக்கும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஹினாரப்பானி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பாகிஸ்தானியர்கள் அத்து மீறி எதுவேண்டுமானாலும் செய்வார்களாம், இந்திய ராணுவத் தளபதியோ, அரசியல் தலைவர்களோ அதுபற்றி பேசினால் அது பாகிஸ்தான் மீது பகைமை உணர்வை தூண்டுவதாக உள்ளதாம். கார்கில் போரில் கொடுக்கப்பட்டதை விட பெரிய அடி பாகிஸ்தானுக்கு கொடுத்தால்தான் வாலை சுருட்டுவார்களோ என்னவோ. பாகிஸ்தானின் வெறிச் செயலுக்கு இந்திய ராணுவத் தளபதி கண்டித்து பேசினார், பா.ஜ. தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், பிரதமர் மிகவும் யோசித்து தயங்கி தயங்கி கண்டித்து இருப்பது வேதனைக்குரியது. வேறு நாடுகளாக இருந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தானை கதிகலங்கச் செய்திருப்பார்கள். நம்மைப் போல் நாள் நட்சத்திரம் பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியாவை ஆள்பவர்கள் தேசத்தின் பாதுகாப்பில் அக்கரையற்றவர்களாக இருந்தால், ஆட்சி ஆள்வதற்கு தகுதியற்ற அவர்களை மக்கள் தண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும் இந்தியாவின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும்.

Tuesday, January 8, 2013

நிதர்சனமான உண்மை!

அன்று இந்தியாவில் இருந்து சென்று சகோதர சகோதரிகளே என்று சிகாகோவில் சொற்பழிவாற்றி, உலகையே தன்பக்கம் ஈர்த்தார் விவேகானந்தர். இன்று அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து இந்து சமயத்தின் பெருமையை பகவத் கீதையை பதவியேற்க சாட்சியமாக்கி உலகையே தன்வசம் திரும்பச் செய்திருக்கிறார் ஒருவர். ஆம், அமெரிக்காவின், ஹவாய் பகுதியைச் சேர்ந்த, துளசி கபார்டு, பகவத் கீதையைப் படித்து, எம்.பி&யாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்காவில், கடந்த 2012&ம் ஆண்டு, நவம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஹவாய் பகுதியிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் துளசி கபார்டு (31), பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள், எம்.பி&க்களாக பதவி ஏற்றனர்.
துளசி கபார்டு, இந்தியர் அல்ல. இவருடைய தந்தை, மைக் கபார்டு, தற்போது செனட்டராக உள்ளார். இவரது தாய் கரோல் போர்டர், கல்வி அதிகாரியாக உள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர், ஜான் போனர், புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது துளசி கபார்டு, பகவத் கீதையைப் படித்து, உறுதி மொழி ஏற்றுள்ளார்.
இதுகுறித்து துளசி கூறியதாவது: “பகவத் கீதை, மன அமைதியை தருவது. வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில், நமக்கு வழிகாட்டுவது. இளம் பருவத்திலேயே, பகவத் கீதை எனக்கு கற்பிக்கப்பட்டது. என் தாய் இந்து. தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவராக இருந்தாலும், அவரும் மந்திர ஜபம் செய்கிறார். இதனால்தான் எனக்கு, இந்து மதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.” நிதர்சனமான உண்மையை, நித்தியமான பெருமையை உணர்வுபூர்வமாக உலக அரங்கில் உறுதிமொழியாக உணர்த்தியிருக்கின்றார் துளசி கபார்டு.

Friday, January 4, 2013

பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்!


டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணமடைந்துவிட்ட நிலையிலும் அந்தக் குற்றத்துக்கான தண்டனையை குற்றவாளிகளுக்கு வழங்கவே மக்கள் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. இது வெக்கக் கேடான விஷயம். போஃபஸ் ஊழல், மாட்டுத் தீவன ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், கொலை வழக்குகள் ஆகியவற்றில் சர்வசாதாரணமாக தப்பித்துக் கொண்ட அரசியல்வாதிகளுக்கு இன்னும் ஒரு போனஸ் கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றம் தனது வரம்பு எது என்று சொல்லியிருப்பதுதான் அது.டெல்லி மாணவி பலாத்காரத்தைத் தொடர்ந்து பல வித விவாதங்களும் வழக்குகளும் மக்களால், பொதுநலச் சிந்தனையாளர்களால் தொடுக்கப்பட்டு வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருக்கும் கருத்து சில அரசியல்வாதிகளுக்கு உச்சி குளிரச் செய்திருக்கும். பலாத்கார குற்றங்களில் தொடர்புள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னாலும் அனைவருக்கும் சட்டம் சமம் என்பதை மறந்துவிடக் கூடாது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். பிட்பாக்கெட் அடிப்பவனையும், பசிக் கொடுமையால் திருடுபவனையும் தண்டிக்கும் சட்டம் பதவியில் இருக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் குற்றவாளிகளையும் பாரபட்சமின்றி தண்டித்தால்தான் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை சாகாமல் இருக்கும். கழுவுகிற மீனில் நழுவிடாமல் சட்டம் தன் கடமையை செய்திட வேண்டும். சட்டம் உண்மையிலேயே இருட்டறை ஆகிவிடக் கூடாது.