Wednesday, August 13, 2008

சுதந்திரமில்லா சுதந்திர தினம்


வீணர்கள் கூட்டம் ஒன்று...

வெடிகுண்டு காட்டி மிரட்டும் செயல் கண்டு...

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

அற்பப் பணத்துக்காக....

சோடைபோன சோம்பேறிகள் நிலை கண்டு...

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

ஒரு லட்சம் காவலர்கள் கண்காணிப்பில்...

தமிழகத்தில் சுதந்திர கொண்டாட்டமாம்!

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

மதத்தின் பெயராலே மனித உயிர் பலி கேக்கும்

உன்மத்தர் வெறிச்செயலால்...

வெட்கித் தலை குணிகின்றேன்...

வேதனைப் படுகின்றேன்.

சுதந்திர தினத்துக்கே சுதந்திரமில்லாததை

எண்ணிப் பார்க்கையில்...

வெட்கித் தலை குணிகின்றேன்....

வேதனைப் படுகின்றேன்.

Tuesday, August 12, 2008

படித்ததில் பிடித்தது - நல்லி குப்புசாமி செட்டியார்


நவநாகரிக ஆடைகள் ஏராளமாக வந்தபோதும் பெண்களுக்கு பட்டு ஆடைகளின்மீது உள்ள ஆசை இன்னமும் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாயிரம் ரூபாயில் துவங்கி பல லட்சம் விலையில் பட்டுப் புடவைகள் விற்கப்படுகின்றன். பட்டு விற்பனையில் எத்தனை ஷோரூம்கள் இருந்தாலும் தனக்கென தனி முத்திரை பதித்து தமிழகம், இந்தியா என்று மட்டும் இல்லாமல் அயல்நாடுகளிலும் தமது கிளைகளை அமைத்து, பட்டு உலகில் தனி சாம்ராஜ்ஜியம் படைத்ததுதான் நல்லி சில்க்ஸ். பதினேழு இடங்களில் நல்லி சில்க்ஸ் கிளைகள் உள்ளன. இதன் உரிமையாளரும், நட்புக்கு இனியவரும், கலை இலக்கிய ஈடுபாடு கொண்டவரும், பத்மஸ்ரீ, கலைமாமணி விருது பெற்றவரும், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் ஊக்கம் அளிக்கும்விதமாக உதவிகளை செய்பவரும், இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவரும், பல சபாக்களுக்கு தலைவராகவும், பாரதிய வித்யாபவனின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ள நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் எழுத்துலக பிரவேசம் மற்றும் படிப்பதில் அவருக்கு உள்ள ஈடுபாடு பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள அவரை சந்தித்தோம். விற்பனை நேரத்திலும், மும்முரமாக சென்றுகொண்டிருந்த வியாபரத்துக்கு இடையிலும், நமக்காக நேரத்தை ஒதுக்கி, தமது சிறுவயது முதல் துவங்கி இன்றைய நிலைவரை கூறி முடித்தார்.

ஐயா, உங்கள் பள்ளிப் பருவத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

இன்று பெரிய பெரிய கட்டடங்களும் மக்கள் கூட்டமும், வாகன போக்குவரத்து நெருக்கடிகளும் நிறைந்துள்ள இந்த தியாகராயா நகர் நான் பள்ளி மாணவனாக இருந்தபோது எப்படி இருந்தது என்பது இன்றும் என்னால் மறக்க முடியாது. இது ஒரு அழகான கிராமமாக இருந்தது. இப்போது உள்ளதை போல் எங்கு பார்த்தாலும் பள்ளிகள் கிடையாது. இன்றும் இயங்கிக்கொண்டிருக்கும் ராமகிருஷ்ணா பள்ளி மட்டும்தான் இங்கு இருந்தது. அங்குதான் நான் படித்தேன். பள்ளிப் பாடங்களில் ஆங்கிலத்தை தவிர மற்ற எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களை பெற்றுவிடுவேன். அப்போது ஆங்கிலத்தில் எனக்கு அவ்வளவாக நாட்டம் இல்லை. அதனாலேயே வகுப்பில் இரண்டாவது, மூன்றாவது மாணவனாக ரேங்க் எடுப்பேன். சிறு வயதில் கதைகள், கவிதைகள் படித்ததுண்டா?நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் நல்லி சிறிய கடையாக இருந்தது. எனது தந்தையார் வியாபாரத்தை கவனித்து வந்தார். பள்ளி முடிந்ததும் கடைக்கு வந்து விடுவேன். எங்கள் கடைக்கு அருகில்தான் அப்போது தமிழ் பண்ணை புத்தக கடை இருந்தது. அந்தக் கடை வாசலில் கரும்பலகையில், அங்கு விற்கப்படும் புத்தகங்கள் சிலவற்றின் பெயரும் அதில் உள்ள சிறப்பான அம்சங்களும் எழுதி போடுவார்கள்.சிறுவர்களுக்கான புத்தகங்கள் காலணா அரையணாவுக்கு கிடைக்கும். காமிக்ஸ் புத்தகங்களும் அங்கு கிடைக்கும். கடை முடியும் வரை காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி படித்துக் கொண்டிருப்பேன்.

தங்களுக்கு புத்தகங்கள்மீதான ஆர்வம் எப்படி, எப்போதிருந்து வந்தது?புத்தகங்கள்மீதான ஈடுபாட்டை எனக்குள் ஏற்படுத்தியவர் எனது ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் நாராயணன் அய்யர்தான். ‘‘மொழி திறனுக்காகவும், பொது அறிவுக்காகவும், பாட புத்தகங்களோடு நீதி நூல்களையும், பெரியோர்களின் வாழ்க்கை தத்துவங்களையும் நூலகங்களுக்கு சென்று படிக்கவேண்டும்’’ என்று கூறுவார். அவரின் வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, அன்றே பள்ளியில் உள்ள நூலகத்துக்கு சென்றேன். அப்போது சிறுவனாக இருந்ததால் நாம் என்ன படிப்பது, எது நமக்கு பிடிக்கும் என்ற குழப்பம் இருந்தது. அங்கிருந்த நூலகர் இரண்டு நூல்களை கொடுத்தார். ஒன்று மகாத்மா காந்தியின் சத்தியசோதனை மற்றொன்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் அமுதமொழிகள். நான் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவன் என்பதால் சாதாரணமாகவே பரமஹம்சரின் அமுதமொழிகளில் அதிக நாட்டம் இருந்தது. அதேபோல் மகாத்மா காந்தியின் சத்தியசோதனை புத்தகத்தில் இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.தேசத்துக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தது மகாத்மாவின் சத்தியமும், அகிம்சையும்தான் என்ற கருத்து எனக்கு பிடித்தது.

படிக்கும் ஆர்வத்தினை தொடர்ந்து நீங்கள் அதிகம் விரும்பி படித்த புத்தகங்கள்...?

எனக்கு ஆன்மிக நூல்கள், நீதி நூல்களில் இருந்த நாட்டம் வரலாற்றின் மீதும் ஏற்பட்டது. வியாபாரத்துக்காக வந்த கிழக்கிந்தியர்கள் நாடாள முடிந்தது எப்படி என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நிர்வாகம் குறித்த பல விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்பினேன்.உதாரணமாக, இன்று எவ்வளவோ வசதிகள் செல்போன்களாகவும், கம்ப்யூட்டர் இண்டர்நெட்டாகவும் தகவல் பரிமாற்றம் சுலபமாக உள்ளது. ஆனால், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றியபோது எந்த வசதிகளுமே இல்லாத சூழலில், எப்படி தொடர்புகளை வைத்து, தகவல்களை பரிமாறி, நடவடிக்கைகளை இந்தியாவில் மேற்கொண்டார்கள் என்பதெல்லாம் எனக்கு வியப்பாக இருந்தது.

நூலகங்களுக்கு சென்றது உண்டா?

1950-களுக்கு முன்பெல்லாம் வரலாற்றுப் பதிவுகளை தெரிந்துகொள்ள வேண்டுமானால் மெட்ராஸ் ஆர்க்கிவ்ஸ் கன்னிமாரா, அடையாறு தியசாஃபிகல் லைப்ரரி போன்றவற்றுக்குதான் செல்லவேண்டும். பெரும்பாலும் புத்தகங்களை வாங்க ஹிகின்போதம்ஸுக்குதான் செல்வேன். ஆனால் அங்கும் எனது தேடலுக்கான புத்தகங்கள் சில சமயம் கிடைக்காது. பள்ளி படிப்பு முடிந்ததும் நான் மேற்கொண்டு பி.ஏ. வரலாறு முடித்து பி.எல். படிக்க நினைத்திருந்தேன். நாம் ஒன்று நினைத்தால் நடப்பது ஒன்றாக இருக்கும் என்பார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. 1956-ல் எனது தந்தை காலமானதால் மேற்கொண்டு என்னால் படிப்பை தொடரமுடியவில்லை.வியாபாரத்தை நான் கவனிக்கவேண்டியதாயிற்று. கீழே கடையும் மாடியில் வீடும் இருந்தது. கடையை மூடியதும் இரவு நேரத்தில் அனைவரும் உறங்கிவிடுவார்கள். ஆனால் நான் மட்டும் தூக்கம் வரும்வரை புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

நீங்கள் படித்தவற்றில் மிகவும் பிடித்தவற்றையும், பிடித்த எழுத்தாளர் பற்றியும் கூறுங்களேன்?

மகாத்மா காந்தியின் சத்தியசோதனை நூலின் ஈர்ப்பினால் நான் மேற்கொள்ள இருந்த சத்தியம், நேர்மையை வியாபாரத்தில் தரம், குறித்த நேரத்துக்கு பணி நிறைவேற்றுதல் என்று பின்பற்றினேன். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகமானாலும் வாரப் பத்திரிகைகள் செய்தித்தாள்களை தவறாமல் படித்துவிடுவேன். ஑எஸ். முத்தையா என்பவர் எழுதிய ஑மெட்ராஸ் ரீ டிஸ்கவர்ட்ஒ என்ற நூல் 1989&ல் வெளியிடப்பட்டது. அதில் உள்ள தகவல்கள் எந்தெந்த நூல்களில் இருந்து சேகரிக்கப்பட்டன என்ற ஆதாரங்களையும் மேற்கோள் காட்டி எழுதி இருந்தார். அவரை எனது மானசீக குருவாகவே ஏற்றுக்கொண்டேன்.

ஓய்வில்லாத சூழ்நிலையில், புத்தகங்கள் படிக்க நேரம் கிடைக்கிறதா? அரிய நூல்களின் எனது தேடல் இன்றும் தொடர்கின்றது. தினமணி, தினத்தந்தி, தி இந்து பத்திரிகைகளில் வரும் நூல் விமர்சனங்களை தவறாமல் படிப்பேன். அதில் நல்ல தகவல்களுடன்கூடிய புத்தகங்களை வாங்கி எனது நூலகத்தில் சேர்த்து வருகிறேன். எனது லைப்ரரியில் சுமார் 20,000 புத்தகங்கள் இருக்கின்றன. அதில் குறைந்தது எட்டாயிரம் புத்தகங்களாவது மறுப்பதிப்பு செய்ய வேண்டியவைகளாக இருக்கும்.

நீங்கள் எழுதிய முதல் நூல் எது?

1983ம் ஆண்டு அருனோதயம் பதிப்பகத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முப்பது நூல்கள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. அதில் என்னையும் ஒரு நூல் எழுத சொல்லி கூறினார் அருணன். மூன்று நாட்களே இருந்த நிலையில், 'எனக்கு மேடையில் பேசுவது சிரமமில்லை, ஆனால் எழுத வராதே’ என்றேன். எனது நண்பர் தொலைக்காட்சி நிலைய இயக்குனர் நடராஜன் அவர்களும், அருணனும் ‘நாங்கள் இருக்கிறோம் தைரியமாக எழுதுங்கள்’ என்று என்னை ஊக்கப்படுத்தினர். அதனால் உருவானதுதான் எனது முதல் புத்தகமான ‘வியாபாரத்தை பெருக்குவது எப்படி?’ என்ற நூல். 1984-ல் இந்நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக விருது வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து எழுதிய நூல்களில் ‘உறவுகாக்கும் வணிகம்’ என்ற நூலுக்கு 1997-ல் தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது. வணிகம், நிர்வாகம், வாழ்வியல் சார்ந்த நூல்கள் இருபதுக்கும் மேல் எழுதியுள்ளேன்.

உங்களின் விருப்பமான நூல்கள் பற்றி...

சித்தர்கள் வாழ்க்கை வரலாறு, ஔவையார் ஆத்திச்சூடி, இசை சம்பந்தமான விமர்சனங்கள் போன்றவற்றை விரும்பி படிப்பேன். புத்தக விமர்சனங்களை பார்த்தும், புத்தக கடைகளுக்கு சென்று புத்தகங்களை வாங்கினாலும், ஒவ்வொரு முறை சென்னை புத்தக காட்சியின்போதும் ஒரே இடத்தில் பல புத்தக வெளியீட்டாளர்களின் புத்தகங்களை வாங்குவது சுலபமாகவும், வாசகர்களுக்கு வரப்பிரசாதமாகவும் இருக்கும். நானும் ஒவ்வொரு முறையும் தவறாமல் புத்தக காட்சியில் புத்தகங்களை வாங்கி வருவதுண்டு. அவற்றை படித்து, பல நேரங்களில் மேடை பேச்சுக்கான குறிப்புகளையும் எடுப்பதுண்டு. அதேபோன்று நானும் ஆர். நடராஜனும் லண்டன் சென்றபோது, பிரிட்டீஷ் லைப்ரரியில் இருந்து இந்தியாவை பற்றிய பழைய வரலாற்று குறிப்புகள் கொண்ட நூல்கள், வணிக நூல்கள் என நிறைய புத்தகங்களை வாங்கி வந்தோம்.

எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ‘நல்லி திசை எட்டும்’ விருது குறித்து கூறுங்கள்?

‘நல்லி திசை எட்டும்’ என்ற காலாண்டு இதழ் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து வெளி வந்துகொண்டுள்ளது. முழுக்க முழுக்க மொழிபெயர்ப்பு கட்டுரைகள் கதைகள் கொண்ட புத்தகமாக வெளிவருகிறது. அதன் ஆசிரியராக குறிஞ்சி வேலன் என்பவர் இருந்துவருகிறார். அந்தப் பத்திரிகை வெளிவருவதற்கான உதவிகளை வழங்குகிறோம். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதை வழங்கி எழுத்தாளர்களை கௌரவித்து வருகிறோம்.எழுத்துலகில் உங்களின் அடுத்த பணிகள் என்னவாக இருக்கும்? பழைய, அரிய நூல்களை மறுபதிப்பு செய்து, பின்வரும் நம் சந்ததியருக்கும் பயனளிக்கும் விதமாக பாதுகாக்க வேண்டும். சமீபத்தில் கூட கர்நாடக இசையில் புகழ்வாய்ந்த காஞ்சிபுரம் நைனாப்பிள்ளை பற்றி பி.எம்.சுந்தரம் எழுதிய நூலை மறுபதிப்பு செய்து வெளி இட்டுள்ளோம்.


தன்னை பற்றி, தமது எழுத்துலக பிரவேசம் பற்றி, புத்தகங்களின்மீது தனக்கு உள்ள ஆர்வம் பற்றியெல்லாம் வெளிப்படையாக, உற்சாகமாக தெரிவித்தார் நல்லி குப்புசாமி செட்டியார். பட்டு உலகில் பட்டொளி வீசி பறந்தபோதும், பிரபலமான தொழிலதிபரானபோதும், தன்னடக்கமும், நற்குணங்களும் கொண்ட நல்லி செட்டியார் அவர்களுடனான நேர்காணலை இனிதே முடித்து விடைபெற்றோம்.