Tuesday, January 15, 2013

தேசப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்!

வீரத் துறவி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் இந்த ஆண்டில், எல்லையைக் கடந்து சீண்டிப் பார்த்திருக்கிறது பாகிஸ்தான். அன்னிய மண்ணில் பாதம் பதித்து நம் தேசத்தின் பெருமைகளை ஆணித்தரமாக எடுத்துவைத்த விவேகானந்தர் பிறந்த பூமியில் அன்னியர் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளது வேதனைக்குரியது.
கடந்த 8.1.2013-ல் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதோடு இரண்டு இந்திய வீரர்களை கொன்று, ஒரு வீரரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் வெறிச் செயலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்பட வேண்டும். இந்த மிருகத்தனமான செயலுக்கு தகுந்த பாடத்தை மத்திய அரசு புகட்டவேண்டும் என்பதே மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பு. இந்தச் சூழ்நிலையில் நியூயார்க் சென்றிருக்கும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஹினாரப்பானி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பாகிஸ்தானியர்கள் அத்து மீறி எதுவேண்டுமானாலும் செய்வார்களாம், இந்திய ராணுவத் தளபதியோ, அரசியல் தலைவர்களோ அதுபற்றி பேசினால் அது பாகிஸ்தான் மீது பகைமை உணர்வை தூண்டுவதாக உள்ளதாம். கார்கில் போரில் கொடுக்கப்பட்டதை விட பெரிய அடி பாகிஸ்தானுக்கு கொடுத்தால்தான் வாலை சுருட்டுவார்களோ என்னவோ. பாகிஸ்தானின் வெறிச் செயலுக்கு இந்திய ராணுவத் தளபதி கண்டித்து பேசினார், பா.ஜ. தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், பிரதமர் மிகவும் யோசித்து தயங்கி தயங்கி கண்டித்து இருப்பது வேதனைக்குரியது. வேறு நாடுகளாக இருந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தானை கதிகலங்கச் செய்திருப்பார்கள். நம்மைப் போல் நாள் நட்சத்திரம் பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியாவை ஆள்பவர்கள் தேசத்தின் பாதுகாப்பில் அக்கரையற்றவர்களாக இருந்தால், ஆட்சி ஆள்வதற்கு தகுதியற்ற அவர்களை மக்கள் தண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும் இந்தியாவின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment