Thursday, June 12, 2008

Book stall-T-NAGAR

கொட்டிக் கிடக்குது புத்தகப் பூக்கள்
தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டி எங்கோ ஒரு சில வீடுகளில் பார்ப்பதே அரிதாக இருந்தது. ஆனால் காலத்தின் மாற்றத்தினாலும் விஞ்ஞான வளர்ச்சியினாலும் படிப்படியாக மாறி இன்று கலர் டி.வி. இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. கணினியும் அதேபோன்ற நிலையை ஒரளவு அடைந்துவிட்ட சூழ்நிலையில், கட்டுரைகள் எழுதவோ, கடிதம் எழுதவோகூட அதிகம்பேர் பேனாவை எடுப்பதில்லை.அதேபோல் உலக விஷயங்களை அறிந்துகொள்ளவும்கூட கணினி யுகத்தில் இணையதளங்கள் உதவுகின்றன. இணையதளங்களில் இல்லாத தகவல்களே இல்லை. மேலும் பொழுதுபோக்கு அம்சங்கள், கேளிக்கை விடுதிகளாகவும், டி.வி.டி.களாகவும்,கை அடக்க செல்போனின் ப்ளூடூத்களாகவும் உருவெடுத்துவிட்ட சூழ்நிலையில் புத்தகம் படிப்போர் எண்ணிக்கை எப்படி உள்ளது, புத்தகப்பிரியர்களின் நிலை என்ன? என்ற கேள்விகளோடு பிக் பஜார் என்று சொல்வார்களே அதுபோன்று சென்னைவாசிகளுக்கு விற்பனை மையங்கள் உள்ள இடங்களில் ஒன்றான தி.நகர் பாண்டிபஜார் நெடுகிலும் நடைபாதை கடைகளோடு உள்ள ஒரு சில புத்தகக் கடைகளை அனுகினோம். கடை இருப்பது நடைபாதை என்றாலும் அங்கே விற்கப்படுபவை பெரிய பெரிய படிப்பாளிகளையும், படைப்பாளர்களையும் ஈர்க்கும் புத்தகங்கள். இங்கே பழைய புத்தகங்கள் பாதி விலைக்கு கிடைக்கின்றன. ஒரு சில கடைகளில் புதிதாக வெளியிடப்படும் பதிப்பகங்களின் புதிய புத்தகங்களும் விற்கப்படுகின்றன. பாண்டிபஜார் பகுதியில் இப்படிப்பட்ட கடைகள் சுமார் ஏழெட்டு கடைகள்வரை உள்ளன. அவற்றுள் ஒரு புத்தகக் கடை உரிமையாளர் அருள்நாதன் என்பவரிடம் பேசும்போது ஑஑கடந்த பத்து வருடங்களாக இதே பகுதியில் ஒரு விற்பனை வளாகத்தில் புத்தகங்கள் விற்பனை செய்து வருகிறேன். பிளாட்பாரக் கடையை ஐந்து வருடமாக நடத்தி வருகிறேன். இங்கு அதிகமாக விற்பனை ஆவது ஆங்கில நாவல்கள், அடுத்ததாக தொழில் முதலீட்டு புத்தகங்களும், சமையல் குறிப்புகள், அழகு கலை குறித்த புத்தகங்களும் அதிகமாக விற்பனை ஆகின்றன. சுமார் இருபது பதிப்பகங்களின் வெளியீட்டில் வந்துள்ள புத்தகங்களை விற்பனை செய்கிறோம். அவற்றுள் விகடன் பதிப்பகத்தின் புத்தகங்களும் உள்ளன. விகடன் பிரசுரத்திற்காகவே ஒரு வாசகர் வட்டம் உள்ளது. அவர்களும் சில புத்தகங்களை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட வகையில் எழுத்தாளர் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், ஜக்கி வாசுதேவின் அத்தனைக்கும் ஆசைபடு,மதனின் வந்தார்கள் வென்றார்கள் போன்ற புத்தகங்களும்.பெண்களுக்கான பழகிய பொருள் அழகிய முகம் போன்ற அழகு குறிப்பு புத்தகங்களும் வாசகர்கள் வாங்கிச்செல்கின்றனர்ஒஒ என்றார். அதே பகுதியில் உள்ள வேறொரு புத்தகக் கடை விற்பனையாளரான செல்வம் கூறும்போது ஑஑ஆங்கில நாவல்களில் சிட்னி ஷெல்டன் நாவல்களும், ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் நாவல்களும், தமிழில் கல்கி சாண்டில்யன் கதைகளும் அதிக விற்பனை ஆகும். ரமணிச்சந்திரனின் புத்தகங்களை பெண்கள் விரும்பி கேட்டு வாங்கிச்செல்வதுண்டு. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற புத்தகங்களை கேட்டு வரும் வாசகர்களும் இருக்கிறார்கள். சிறுவர்களுக்கான புத்தகங்களில் தென்னாலி ராமன் கதைகள், பஞ்சதந்திர கதைகள் சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனஒஒ என்றார். இந்தப் பகுதியில் புத்தகங்களை வியாபாரம் செய்யும் விற்பனையாளர்கள் அனைவருமே சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபாதை புத்தகக் கடைகளை நடத்தி வருகின்றனர். விற்பனையை பொருத்தமட்டில் அன்றும் இன்றும் ஒரே நிலை உள்ளது அதில் சரிவு ஏதும் இல்லை என்கிறார்கள். நாவல்களையும், கட்டுரை நூல்களையும் தேடிப்பிடித்து வாங்கிச் செல்லும் தொடர்ந்து வரக்கூடிய வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உள்ளார்கள். ஒரு கடையில் இல்லாவிட்டாலும் வேறு கடை ஏதாவது ஒன்றில் வாசகர்கள் கேட்டு வரும் புத்தகங்கள் கிடைத்துவிடும். சில நேரங்களில் நாங்களேகூட நன்றாக பழக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக, கிடைக்காத புத்தகங்களை வேறு எங்காவது கேட்டு வாங்கித் தருவதும் உண்டு என்கிறார்கள். ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேலான வாடிக்கையாளர்கள் தங்கள் புத்தகக் கடைக்கு வந்து செல்வதாக சொல்கிறார்கள். இதே பகுதியில் அப்துல்லா என்பவர் ஒரு புத்தகக் கடை நடத்தி வருகிறார். ஑஑எனது தந்தை சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே இங்கு புத்தகக் கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். அப்போதெல்லாம் மூன்று அல்லது நான்கு கடைகள்தான் இருந்தன ஐந்து வருடங்களுக்கு முன்புதான் மேலும் சில கடைகள் பெருகிவிட்டன. இருந்தாலும் பெரிய அளவில் எங்கள் விற்பனையில் பாதிப்புகள் இல்லை. பெரும்பாலும் வரும் வாடிக்கையாளர்கள் சேகுவேரா, ஸ்டாலின், ஹிட்லர் போன்ற தலைவர்கள் புத்தகங்களையும் ஸ்டெஃபன் ஆர் கோவே என்ற ஆங்கில எழுத்தாளரின் செவன்த் ஹாபிட்ஸ், எய்த் ஹாபிட்ஸ் போன்ற நாவல்களையும் அதிகமாக வாங்கிச் செல்வார்கள். மல்லிகா பத்ரிநாத், தாமோதரன் ஆகியோர் எழுதிய சமையல் குறிப்புகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியா புக் ஹவுஸ் வெளியீடான டிங்கிள் என்ற சிறுவருக்கான ஆங்கில கதை புத்தகம் இல்லாத கடைகளே இருக்காதுஒஒ என்றார். வீட்டுக்குள்ளேயே உலகை அழைத்துவரும் கணினியும் இணையதளங்களும் எண்ணற்றவையாக இருந்தாலும், புத்தக பிரியர்களின் தேவையும் அறிவுப்பசிக்கான, பொழுதுபோக்குக்கான தேடல்களும் பூர்த்தியாகும் இடமாக, நல்ல நல்ல அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும்,பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட புத்தகங்களை நமக்கு கிடைக்கச் செய்யும் இடமாகவும், சிலரின் வாழ்வாதாரமாகவும் பாண்டிபஜாரின் நடைபாதை கடைகள் விளங்குகின்றன.

No comments:

Post a Comment