Thursday, June 12, 2008

Bus rate

போக்குவரத்து அமைச்சரின் பேத்தல்
சென்னையில் கடந்த மே 28-ந் தேதி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 20 ஆண்டுகளாக விபத்தில்லாமல் பஸ் ஓட்டிய ஓட்டுநர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துறை செயலாளர் தலைமை தாங்கினார். விபத்தில்லாமல் பேருந்து ஓட்டிய ஓட்டுநர்கள் 1100 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கி பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு ‘‘அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் தினமும் சராசரியாக ரூ.91 லட்சம் வருவாய் மட்டுமே கிடைக்கிறது. அதிகபட்சமாக ஒரு கோடியே இருபது லட்சம் வசூலாகியிருக்கிறது. ஆனால், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தினமும் ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் வசூலாகிறது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஒத்துழைப்பே இந்த வருவாய்க்கு காரணம்’’ என்று பேசியுள்ளார். இது எவ்வளவு பெரிய பேத்தல் என்பதை நிச்சயம் சென்னைவாசிகள் உணர்வார்கள். காலையில் அவசர அவசரமாக கிளம்பி நேரத்திற்கு அலுவலகம் சென்று சேரவேண்டும் என்ற வேகத்தில் ஓடும் நடுத்தர வர்கத்தின் தலையை தடவியதால் கிடைக்கும் வருவாய்தான் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் கிடைக்கும் அதிகப்படியான வருவாய் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு நாளும் பிழைப்பு தேடி சென்னையில் அடைக்கலம் புகும் நடுத்தர வர்கத்தினர் ஏராளம் ஏராளம். அவர்களின் மாதாந்திர வருமானமும்(4,000 முதல் 5,000 வரை) சொற்பமாகவே இருக்கும். அப்படி இருக்க அலுவலகத்திற்கு தாமதமானால் எங்கே அன்றைய தினம் வீணாகிவிடுமோ என்ற பதட்டத்துடன் ஓடும் மக்களின் இக்கட்டான சூழ்நிலைகளை காசாக்கும் செயலில்தான் அரசு இறங்கி உள்ளது. ஒரு நாளைக்கு பேருந்து கட்டணத்துக்காக மட்டுமே இருபதில் இருந்து முப்பது ரூபாய் செலவு செய்தால் மாதத்தில் அந்த செலவு மட்டுமே சுமார் 900 ரூபாய் ஆகிவிடும். பஸ் பாஸ் வாங்கலாம் என்றால் அதுவும் மாதத்துக்கு 600 ரூபாய் ஆகின்றது. பத்து பந்தாவான ஏஸி, டீலக்ஸ் பேருந்துகளுக்கு பதிலாக சாதாரணமான இருபது பேருந்துகளை விடலாமே. அதனால் மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டும், படிகளில் தொங்கிக் கொண்டும் போகாமல், உயிருக்கும் ஆபத்தில்லாமல்,பாதுகாப்பாகவும்,வசதியாகவும்,நேரத்துக்கு பேருந்துகளில் பயணம் செய்ய முடியும். அதோடு மட்டுமல்ல குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவை செய்ய முடியும். அதனால், மேலும் சில இளைஞர்களுக்கு நடத்துனர் ஓட்டுநர் வேலைகளும் கொடுக்க முடியும். இதைவிட்டு விட்டு டீலக்ஸ், ஏஸி, தாழ்தளபேருந்து என்ற பெயரில் பேருந்தில் ஏறினாலே டிக்கட் ஏழு ரூபாய், பத்து ரூபாய் என்று வசூலித்தால் ஏழை மக்கள் என்ன செய்ய முடியும்.தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் ஏஸி பஸ்ஸில் ஏறினாலே இருபத்தைந்து ரூபாய் டிக்கட். ஆனால் அதிகமாக ஓடுவது ஏஸி பஸ்ஸாக உள்ளபோது பிழைப்புக்கே கஷ்டப்படும் மக்கள் அதிகப்படியான கட்டணத்துக்கு என்ன செய்ய முடியும்.கிண்டியில் இருந்து டி.வி.எஸ்வரை டீலக்ஸ் பஸ்ஸில் செல்ல கட்டணம் எட்டு ரூபாய் ஆகிறது. ஆனால் சாதாரண பஸ்ஸில் நான்கு ரூபாய்தான் கட்டணம்.டீலக்ஸ் ஏஸி என்ற பெயரில் இரண்டு மடங்கு,மூன்று மடங்கு கட்டணத்தை வசூலிப்பது கொடுமையிலும் கொடுமை. போகிற போக்கை பார்த்தால் மாநகர பேருந்துகளில் மக்கள்(நடுத்தர, ஏழை எளிய) ஏறவே முடியாது போல் உள்ளதே..! போதாக்குறைக்கு பெட்ரோல் விலைவேறு விஷம்போல் ஏறுகிறது. தமிழக அரசு மனது வைத்தால் மட்டுமே நிச்சயம் இந்த பிரச்சனையை சரிசெய்ய முடியும். தி&நகரில் இருந்து அண்ணா நகருக்கு சுமார் இருநூறுக்கும் மேல்பட்ட ஷேர் ஆட்டோ க்கள் ஓடுகின்றன. அனைத்து ஆட்டோ க்களுக்குமே நல்ல வசூல் கிடைக்கிறது. அப்படி என்றால் பேருந்துகளின் பற்றாக்குறை,நேரத்துக்கு பேருந்துகள் கிடைக்காதது போன்ற காரணங்களால்தான் மக்கள் ஷேர் ஆட்டோ க்களில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலை சென்னை முழுதுமே பரவலாக உள்ளது. அரசு பரிசீலணை செய்து மக்களின் தேவைகளை உணர்ந்து உண்மையான அக்கரையோடு செயல்பட்டால் நடுத்தர வர்கத்தின் தலையை தடவி அந்த வருமானத்தை காட்டி பெருமை அடித்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்காது.

No comments:

Post a Comment